கோவை சிறை ஏன் வேண்டாம்? - காவல்துறையினர் டார்ச்சர் செய்தார்களா என சவுக்கு சங்கரிடம் நீதிபதி கேள்வி
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர் குறித்து தவறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிந்து அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் திருச்சியில் அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்போடு திருச்சி நீதிமன்றத்திற்கு நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு முதல் நாள் திருச்சி லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் மறுநாள் திருச்சி மாவட்ட கணினி சார் குற்ற பிரிவு காவல் துறையினர் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க திருச்சி மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது நீதிபதி ஜெயபிரதா ஒரு நாள் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி உத்தரவு வழங்கினார். நேற்று மாலை 4 மணியிலிருந்து இன்று மாலை 4 மணி வரை அவருக்கு போலீஸ் காவல் கொடுக்கப்பட்ட நிலையில் நீதிபதியின் உத்தரவுப்படி நேற்று அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து விசாரணை துவக்க வேண்டும்.
மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் மருத்துவர் பரிசோதனை செய்து ஆஜர் படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட கணினி சார் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி கோடிலிங்கம் தலைமையிலான போலீசார் அவரிடம் நடத்திய விசாரணை நிறைவுற்ற நிலையில் இன்று முதலில் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து வந்துள்ளனர். அதன் பிறகு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதி ஜெயப்பிரதா முன் ஆஜர்ப்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர் உங்களை காவல்துறை விசாரணையில் எதுவும் டார்ச்சர் செய்தார்களா என்று கேட்ட பொழுது இல்லை என அவர் பதில் அளித்தார். தன்னை கோவை சிறையில் தனி அறையில் வைத்துள்ளதாகவும், அதில் இருந்தால் மன நோயாளி ஆகி விடுவேன் என நீதிபதியிடம் முறையிட்டார். தனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுகோள் கடிதம் அளித்தால் தகவல் கோவை சிறைக்கு தருகிறேன் என்றார். திருச்சி சிறையில் தன்னை அடைக்க வேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டார்.
ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பிய பொழுது, போதை பழக்கத்தில் உள்ள சிறைவாசிகளுடன் மனம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுடனும் அடைத்து வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். வேறு வார்டுக்கு மாற்ற வேண்டும் என திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதாவிடம் வேண்டுகோள் விடுத்தார். சங்கரின் வேண்டுகோள் மனுவை ஏற்ற நீதிபதி கோயம்புத்தூர் சிறை கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் (28.5.2024) வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து கோயம்புத்தூர் சிறைக்கு மீண்டும் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision