திருச்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - வாலிபர் கைது
மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களோடு கொரியர் மூலம் போதைப் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து வெளிநாட்டிற்கு கொரியர் அனுப்பி வந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சுமார் 10 கிலோ எடை கொண்ட கவர் ஒன்றை கொரியர் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்ப வந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (32) என்பதும், அவர் கொண்டு வந்த பார்சலை பிரித்து சோதனை செய்தபோது அதில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை வெளிநாட்டுக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் எட்டரைப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அந்த வாலிபரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தனர். திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வருவது மட்டுமே இருந்த நிலையில், தற்பொழுது போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn