திருச்சி மாவட்டத்தில் 2.04 இலட்சம் தரமான மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் 2.04 இலட்சம் தரமான மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல்

விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானமும், வேலை வாய்ப்பும் கிடைக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையினை உருவாக்குவதற்கும் ‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் (TNMSGCF) தொடங்கப்பட்டு மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாய நிலங்களின் வரப்புகளிலும் மற்றும் குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலும் நடவு செய்யப்பட்டு மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது.

இத்திட்டம் தமிழக முதல்வர் 16.11.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தேக்கு, மகாகனி, மலை வேம்பு, செம்மரம், புங்கன், புளி மற்றும் வேம்பு உள்பட பல்வேறு தரமான மரக்கன்றுகள் தமிழ்நாடு அரசு வனத்துறையின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள MR. பாளையம் வனத்துறை நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமத்தினைச் சேர்ந்த விவசாயிகள் & இதர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மரக்கன்றுகளைப் பெறுவதற்கு உழவன் செயலி மூலமோ அல்லது அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திலோ பதிவு செய்து வேளாண்மைத்துறையின் பரிந்துரையின்படி கன்றுகள் பெறுவதற்கான உத்தரவு நகலினை பெற்றுத் தேவையான மரக்கன்றுகளை MR.பாளையம் இடத்திலுள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலிலிருந்து 
இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மரக்கன்றுகள் விநியோகம் ‘வரப்பு நடவு முறை” எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 
மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2.04 இலட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மரக்கன்றுகளை பராமரித்திட விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7/- வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21/ வழங்கப்படும். மரக்கன்றுகள் அனைத்தும் மழைநீரைப் பயன்படுத்தி டிசம்பர் மாதத்திற்குள் நடவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நடப்பட்ட மரக்கன்றுகள் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்திடவும் களப்பணியாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். சிறுகுறு விவசாயிகள், பெண் விவசாயிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக விவசாயிகளின் நிலங்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதால் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன், விவசாய நிலங்களின் மண் வளமும் மேம்படுவதோடு மாநிலத்தின் பசுமைப்பரப்பும், சுற்றுப்புறச் சூழலும் மேம்படுத்தப்படுகிறது. ஆகவே ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn