திருச்சி மாநகரில் அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கி சென்ற பள்ளி மாணவர்கள் மோதி 2 பெண்கள் காயம்

திருச்சி மாநகரில் அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கி சென்ற பள்ளி மாணவர்கள் மோதி 2 பெண்கள் காயம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்தில் பயணித்து பள்ளிக்கு வருகின்றனர் இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்து படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி பயணிப்பது தொடர் கதையாகியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவரம்பூர் செல்லக்கூடிய அரசு பேருந்து படிக்கட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொங்கியபடி பயணித்தனர். இந்த பேருந்து தெப்பக்குளம் வழியாக சென்று கொண்டிருந்தபோது அங்கு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மாணவர்களின் தலை மோதுவது போல் சென்றது இதையும் பொருட்படுத்தாத மாணவர்கள் தொடர்ந்து பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.

அப்போது இப்ராஹிம் பூங்கா பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது மாணவர்கள் மோதியதில் அவர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் இரண்டு பெண்கள் காலில் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த மற்ற பொதுமக்கள் கீழே விழுந்தவர்களை தூக்கிவிட்டு பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை வசை பாடினர். குறிப்பாக பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க பள்ளி கல்லூரிகளில் மாநகர காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இது போன்ற சில மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்குவதை ஒரு பேஷனாக செய்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO