மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை - திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் திருச்சியை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். இதுபற்றி அறிந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை கார்த்திக் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
பின்னர் இந்த சம்பவத்துக்குட்பட்ட பகுதி சிறுகனூர் காவல் நிலைய எல்லையில் இருந்து பிரிக்கப்பட்டு காணக்கிளியநல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்டு வந்ததால் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை திருச்சி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் சுமதி ஆஜராகி வாதாடினார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணை நிறைவு பெற்றது. நீதிபதி ஸ்ரீவத்சன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து இருந்தார். இதையடுத்து கார்த்திக்கை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision