21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் - ஆட்சியர் தகவல்
கோமாரி எனப்படும் கால் மற்றும் வாய் காணை நோயானது வைரஸ் கிருமி தாக்கத்தால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஓர் கொடிய நோயாகும். நோய் தாக்கிய கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல், வாய் மற்றும் காலில் புண் ஏற்படுதல், வாயில் உமிழ்நீர் வடிதல், பால் குறைதல் மற்றும் சினை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இக்கொடிய நோயிலிருந்து தங்களுடைய கால்நடைகளை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு அனைத்து விவசாய பெருமக்களும், கால்நடை வளர்ப்போரும் தங்கள் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடப்படுவதனால் கறவை மாடுகள் குறைவாக பால் கறக்கும் என்ற அச்சமோ, சினை மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் என்ற அச்சமோ தேவையில்லை. இத்தடுப்பூசியினால் 100 சதவீதம் தங்களது கால்நடைகளை கால் மற்றும் வாய் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தில் 5வது சுற்று தடுப்பூசிப் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த 5வது சுற்று தடுப்பூசி போடும் பணியானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுமார் 3 இலட்சத்து 11 ஆயிரம் கால்நடைகள் பயன்பெறவுள்ளன. இத்தடுப்பூசி பணியானது 10.06.2024 முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினரால் காலை 6.00 மணி முதல் 9.30 மணி வரையிலும், பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
கால்நடை தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்படும் நாட்களிலும், கால்நடை மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படும். மேற்குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் இந்நோயினை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.
எனவே, மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்குத் தவறாமல் தடுப்பூசிப் போட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு கால்நடையும் இந்நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தங்கள் கிராமத்தை தேடிவரும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கொண்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision