திருச்சி மாவட்டத்தில் 232.59 கி.மீட்டருக்கு ரூ.19 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்

திருச்சி மாவட்டத்தில் 232.59 கி.மீட்டருக்கு ரூ.19 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்

தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா  அவர்கள் தலைமையில் திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காணொளி காட்சி வாயிலாக கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் சந்தீப் சக்சேனா திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்... தமிழகத்தில் முதலமைச்சர் ஆணைப்படி  ரூ.80 கோடி செலவில் 4694.11 கி.மீ நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் மே மாதம் 31 ஆம் தேதிக்கு முன்பாக முழுமையாக முடிக்கப்படும். இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் முழுமையாக தூர்வாரப்படும். திருச்சி மாவட்டத்தில் 90 தூர்வாரும் பணிகள் 232.59 கி.மீட்டருக்கு ரூ.19 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டுடையது தான் அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. அணை பாதுகாப்பு சட்டம் அனைத்து அணைகளின் பாதுகாப்பை கண்காணித்து உறுதி செய்ய தான். முல்லை பெரியாறு அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

காவேரி - கோதாவரி இணைப்பு திட்டப்பணிகள் விரைவாக தான் நடைபெற்று வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவை அவர்களிடம் பேசி அவர்கள் ஒத்துழைப்போடு இத்திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO