திருச்சி புதிய காவிரி பாலம் - முக்கியமான 3 கட்டடம் இடிக்கப்படும் - அமைச்சர் நேரு பேட்டி
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்ட மின் தூக்கி (LIFT), திரவ ஆக்ஸிஜன் கொள்கலன், தானியங்கி நோய் எதிர்ப்பு குருதி பகுப்பாய்வு இயந்திரம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு.... தமிழ்நாட்டில் வார்டுகள் மறுவரையறை , மாநகராட்சி விரிவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்பு அந்த குழு அமைக்கப்படும். ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சருடன் ஆலோசித்து, அந்த குழு அமைக்கப்பட்டு வார்டுகள் மறுவரையறை செய்யப்படும்.
மெட்ரோ ரயில் திட்ட ஆய்வு பணிக்காக, திருச்சியில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் ஆய்வு பணிகள் முடிந்த பின்பு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.
சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சிறப்பான ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். எனவே, சட்டமன்ற தேர்தல் எந்த தேதியில் வர வேண்டுமோ அந்த தேதியில் தான் நடக்கும். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்தில் தேர்தல் வருமா என்கிற கேள்விக்கே இடமில்லை.
தி.மு.க வில் 2 கோடி பேரை உறுப்பினர்களாக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். அது சாத்தியம் தான். திருச்சியில் புதிய காவிரிப் பாலம் அமைப்பதற்கு, மத்திய அரசு அலுவலகம் ஒன்றை அகற்ற வேண்டி உள்ளது. அவர்களுடன் பேசி அது அகற்றப்பட்டு பின்பு புதிய காவேரி பாலப் பணிகள் தொடங்கும்.
திமுக ஆட்சியில் திருச்சி புறக்கணிக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் கொடுத்திருக்கிறார். 20 மாத தி.மு.க ஆட்சியில் ரூ.3000 கோடி அளவிற்கு திட்டங்கள் திருச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை ஆனால் பல கோடி மதிப்பிலாம திட்டங்களை தி.மு.க அரசு செய்து வரும் நிலையில் ஊடகங்கள் தான் திருச்சி புறக்கணிக்கப்படுவதாக கூறுகிறார்கள். திருச்சி ஒருபோதும் புறக்கணிக்கப்படாது. திருச்சியை முதல்வர் நேசிப்பவராக இருக்கிறார். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு நிதியை முதல்வர் வழங்குகிறார் என்றார்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அமைச்சர், ஆட்சியர், மேயர், மருத்துவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் யாரும் முக கவசம் அணியவில்லை. முக்கியமாக சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கூட்டமாக பங்கேற்பது முககவசம் அணியாமல் தனிமனித இடைவெளி கண்டுபிடிக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களைப் பார்க்க வருபவர்களும் கட்டாயமாக முகககவசம் அணிய வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.