முசிறி காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 4 பேர் மாயம்- இருவர் உடல் மீட்பு

முசிறி காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 4 பேர் மாயம்- இருவர் உடல் மீட்பு

முசிறி அந்தரபட்டி பகுதியில் வசிப்பவர்  ஜெயலட்சுமி.இவரது உறவினர்கள் கோவை மற்றும் கரூர் பகுதியில் இருந்து ஜெயலக்ஷ்மி இல்லத்திற்கு நேற்று வந்துள்ளனர்.பின்னர்  ஜெயலட்சுமியின் உறவினர்களான கோவை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் சரவணகுமார் (31) சிறுவர்கள் மிதுனோஷ்(8) ,நித்திஷ்குமார் (15),ரத்திஷ் (12) ஆகியோர் உள்பட 9 பேர் முசிறி காவிரி ஆற்றில் உள்ள பரிசல் துறை பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர்.  ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பேராசிரியர் சரவணகுமார் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.

அப்போது சிறுவர்கள் நிதிஷ்குமார், ரத்தீஷ், மிதுனேஷ் ஆகியோரும்  மாயமாகினர்.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி தீயணைப்பு மீட்பு படை வீரர்கள், மற்றும் காவல்துறையினர்  காவிரி ஆற்று தண்ணீரில் இறங்கி தேடினர். அப்போது சரவணகுமார் உடல் சடலமாக மீட்கப்பட்டது.நித்திஷ்குமார் (15) உயிருடன் மீட்கப்பட்டார்.

தொடர்ந்து மிதுனேஷ், ரத்திஷ் ஆகியோரை தேடியபோது எதிர்பாராதவிதமாக முசிறி கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரது மகன் பார்த்திபன் (12) என்ற சிறுவனின் சடலம் கிடைத்தது.


தேடிய சிறுவர்களின் சடலம் கிடைக்காமல் மேலும் ஒரு சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் சிறுவர்கள் இருவரையும் மீட்புப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.  இறந்துபோன கல்லூரி உதவிபேராசிரியர் சரவணகுமாருக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.