திருச்சியில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உபரி நீர் வழங்கும் திட்டம் - ஆட்சியர் அறிவிப்பு!!
கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் வட்டம், மாயனூர் கதவணையில் இருந்து காவேரி ஆற்றின் வெள்ள உபரி நீரினை நீரேற்றம் செய்து கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் பொன்னணியாறு அணை மற்றும் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கண்ணூத்து அணைகளுக்கு நீர் வழங்கும் திட்டம்- ஆய்வு பணிகள் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisement
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று காவிரி ஆற்றின் வெள்ள கால உபரி நீரினை நீரேற்றம் செய்யும் திட்டம் மூலம் கரூர் மாவட்டம், கடவூர் வட்டம்,
பொன்னணியாறு அணை மற்றும் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கண்ணூத்து அணைகளுக்கு நீர் வழங்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
Advertisement
பொன்னணி ஆறு அணையானது கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பூஞ்சோலை கிராமத்தில் செம்மலையின் அடிவாரத்தில் 1974- ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு 120 மில்லியன் கன அடி ஆகும். கண்ணூத்து அணையானது திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், எலமணம் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் கொள்ளளவு 56.15 மில்லியன் கன அடி ஆகும். பொன்னணி ஆறு அணை மற்றும் கண்ணூத்து அணைகள் கடந்த பல வருடங்களாக போதிய நீர் வரத்து இன்றி பாசனத்திற்கு திறக்கப்படாமல் உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்னணியாறு அணையின் கீழ் உள்ள முகவனூர் கிராமத்தில் உள்ள 1957 ஏக்கர் நிலங்களும் செக்கனம் மற்றும் பழைய கோட்டை கிராமங்களில் உள்ள 144 ஏக்கர் விளைநிலங்களும் கண்ணூத்து அணையின் கீழ் உள்ள 734 ஏக்கர் விளைநிலங்களும் பாசனம் பெறுவதுடன் குடிநீர் வசதி மேம்படுத்தப்படும்.
இத்திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.