டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதியம் உயர்த்தியது ஏற்புடையதல்ல - தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதியம் உயர்த்தியது ஏற்புடையதல்ல - தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் உள்அரங்கில் இன்று மாநில செயலாளர் சிவா தலைமையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்து அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் 18 ஆண்டுகளாக டாஸ்மாக் மதுபானக்கடையில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் சிறப்புத்தலைவர் இரணியப்பன்...

திமுக அரசு 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம், பணிவரன் முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சட்டமன்றத்தில் 500 ரூபாய் ஊதியம் உயர்த்தி அறிவித்துள்ளது ஏற்புடையதாக இல்லை. கடந்த ஆட்சியிலும் தற்போதும் டாஸ்மாக் ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யாமல் கடைநிலையில் பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் பல்வேறு இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர்.

நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது என ஒருபக்கம் அமைச்சர் கூறுகிறார். டாஸ்மாக் நிர்வாக மேலாளர் பார்த்து நடந்துக்கொள்ள சொல்வதன் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய மறைமுகமாக கூறுவதாக தெரிவித்தனர். மேலும் வாழ்வாதாரத்திற்கான ஊதியம் வழங்கிட வேண்டும். தற்போதைய சம்பளம் 10 ஆயிரம் போதுமானதாக இல்லை.

எனவே 18 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை கொச்சைப்படுத்தும் வகையிலும், அவர்களது பணியை குறைசொல்லும் வகையில் ஆட்சியாளர்களின் செயல்பாடு உள்ளது என்றும், ஊதிய உயர்வு, பணி வரன்முறை, காலமுறை ஊதியம் வழங்கிடகோரி விரைவில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சட்டத்திற்குட்பட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn