திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே ரேஷன் கடைக்குள் தஞ்சமடைந்த 5 அடி நீள நல்ல பாம்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெ.1டோல்கேட் அடுத்து உள்ள கூத்தூரில் இயங்கி வரும் ரேஷன் கடைக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று புகுந்தது. அப்போது பணியிலிருந்த நியாயவிலை கடையின் ஊழியர்கள் மற்றும் ரேஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்றுக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் வந்து பார்வையிட்டனர். அப்போது நல்ல பாம்பு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளின் இடைவெளியில் சென்று தஞ்சமடைந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகள் அதிக அளவில் உள்ளதால் அதனை அப்புறப்படுத்தி கொடுத்தால் மட்டுமே பாம்பை பிடிக்க இயலும் என ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் தெரிவித்துவிட்டு பாம்பு பிடிக்கும் பணியை கைவிட்டு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் ரேஷன் கடைக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் நேற்று வழக்கம்போல் ரேஷன் கடை திறக்கப்பட்டு அங்கிருந்த சாக்கு பை மற்றும் அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு தஞ்சமடைந்திருந்த நல்லபாம்பு திடீரென தொழிலாளர்களை கண்டு சீரியது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் சசிகலா சமயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சமயபுரம் தீயணைப்பு துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO