மயான பாதை ஆக்கிரமிப்பு என கூறி சாலை மறியல்
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கரடிப்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆதியம்மாள். சம்பவத்தன்று இவர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்நிலையில் அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்லும் பாதையில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் உடலை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் இறந்தவரின் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட இடம், பட்டா இடம் என்பதால் அதற்கு அருகிலேயே உடலை கொண்டு செல்ல ஏற்பாடு செய்து தருகிறோம் என்று வருவாய் துறை அதிகாரிகள் கூறினர். ஆனால் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் இந்த போராட்டம் நீடித்தது.
இந்த நிலையில் துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தி இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு இறந்தவரின் உடலை எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn