பள்ளிகளில் பகல் இரவு சம நாள் வானியல் செயல்பாடு  அறியும் சிறப்பு நிகழ்ச்சி

பள்ளிகளில் பகல் இரவு சம நாள் வானியல் செயல்பாடு  அறியும் சிறப்பு நிகழ்ச்சி

பொதுவாக பகல் நேரமும் இரவு நேரமும் சமமாக இருப்பதில்லை. குளிர்காலங்களில் இரவுப்பொழுது சற்று நீண்டிருப்பதையும், கோடையில் பகல் சற்று நீண்டிருப்பதையும் கவனித்திருப்பீர்கள். சூரியன் உதிக்கும் புள்ளி ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே வரும். ஒர் ஆண்டு முழுவதும் சூரியன் உதிக்கும் புள்ளிகளை எடுத்துக் கொண்டால் அப்புள்ளிகள் இட, வலமாக நகர்வதைக் காணலாம்.

ஒர் ஆண்டில் இரு நாட்கள் சூரியன் சரியான கிழக்கில் உதிக்கும். அவ்விரு நாட்களில் பகலும் இரவும் சமமாக இருக்கும். இந்த நாட்கள் பகலிரவுசம நாட்கள் (Equinox) என்கிறோம். பகலும், இரவும் சமமாக இருக்கும் நாளிலிருந்து அதாவது சூரியன் சரியான கிழக்கில் உதித்து நிலநடுக்கோட்டிற்குச் சரியாக நேர்மேலே செல்லும் நாளை முதல் நாளாகக் கொண்டு தமிழர்கள் ஆண்டைக் கணக்கிட்டனர். சமநோக்கு புள்ளிகளைப் போல் இடது, வலது ஓரமாக இருக்கும் இரண்டு புள்ளிகள் கதிர் திரும்பும் புள்ளிகள் (Solestice) என அழைக்கப்படுகின்றன.

இப்புள்ளிகள் வரை செல்லும் சூரியன் மறுபடியும் திசைத் திரும்பும் புள்ளிகளாகும். சித்திரை முதல்நாளன்று சமநோக்கு நாளாக இருந்தபோது கதிர் திரும்பும் புள்ளிகள் தை 1 மற்றும் ஆடி 1 ஆக இருந்துள்ளன. இடது ஓரத்தில் ஆடி 1, வலது ஓரத்தில் தை 1 என இருந்தது. தை 1 அன்று வலதுகோடியில் உதிக்கும் சூரியன் அடுத்த நாள் அதாவது தை 2 அன்று சற்று இடதுபுறம் தள்ளி உதிக்கும். இப்படி தினமும் உதிக்கும் புள்ளி நகர்ந்துக் கொண்டே வருவதைத்தான் வடசெலவு (உத்திராயணம்) என்கிறோம். சித்திரை 1 அன்று நடுவில் வந்து, மேலும் வடக்கே பயணித்து ஆனி மாதம் 30 ஆம் தேதி அன்று வடசெலவை முடித்துக்கொள்ளும். அடுத்த நாள் அதாவது ஆடி 1 அன்று தெற்கிலிருந்து வடக்கே தனது பயணத்தைத் தொடரும்.

இதுவே தென் செலவு (தட்சணாயணம்) என்கிறோம். உண்மையில் சூரியன் தெற்கு வடக்காக நகரவில்லை, அது உதிக்கும் புள்ளிகளை ஒரு ஆண்டு முழுவதும் கவனித்தால் அது நகர்ந்ததைப் போலத் தெரியும் பாதையைத்தான் அவ்வாறு கூறுகிறோம். ஆனால், 1500 ஆண்டுகளுக்கு முன் கணியர்கள் கணித்ததை எந்த மாற்றமும் இன்றி நாம் பின்பற்றி வருகிறோம். நடைமுறையில் இன்றைய வானியல் இக்கணிப்பிலிருந்து மாறியுள்ளது. தற்காலத்தில் வடசெலவு, தென்செலவு தை 1, ஆடி1 ஆகிய நாட்களில் நடைபெறுவதில்லை. வேறு எந்த நாட்களில் நடைபெறுகின்றன என்பதை அறிந்துகொள்ளலாமா? செங்குத்தாக நட்டுவைக்கப்பட்டக் குச்சியின் நிழலைத் தொடர்ந்து கவனிப்பதன் மூலம் இந்நாட்களை எளிதாக கணக்கிடலாம்.

நமது பள்ளியின் மொட்டைமாடியில் சூரியநகர்வை ஆய்வு செய்யும் நோக்கில் இரும்புக்குச்சி ஒன்று நிரந்தரமாக நடப்பட்டுள்ளது. குச்சியின் நிழல் நகரும் திசையைக் கொண்டு இதை மாணவர்களே கணக்கிட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாரதி பள்ளி, திருச்சி மொட்டைமாடியில் சூரியநகர்வை ஆய்வு செய்யும் நோக்கில் இரும்புக்குச்சி ஒன்று நிரந்தரமாக நடப்பட்டுள்ளது. குச்சியின் நிழல் நகரும் திசையைக் கொண்டு சூரியனின் நகர்வைப் புரிந்துகொள்ளவும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குச்சியின் நிழலை ஆய்வதன் மூலம் மாணவர்கள் பூமி, சூரியன் தொடர்பான நிறைய செயல்பாடுகளை செய்யலாம். பகலிரவு சமநாள்(Equinox), கதிர்திரும்பும் நாள்(Solstice), பூமியின் சுற்றளவு(Perimeter of Earth), பூமியின் அச்சின் சாய்வு(Inclination of Earth's Axis), அவ்விடத்தின் அட்சம்(Latitude), சரியான திசைகளை அறிதல்(Exact Direction), அவ்விடத்தின் உச்சி வேளையை அறிதல்(Local Noon of that place), பூமி சுழலும் வேகம்(Speed of Earth Rotation), Analemma உட்பட பல்வேறு பகல்நேர வானியல் செயல்பாடுகளை (Daytime Astronomical Activities)  மாணவர்களே கணக்கிட்டு அறியமுடியும். சில செயல்பாடுகள் அன்று ஒருநாள் மட்டும் இருக்கும், சில செயல்பாடுகள் வாரம் ஒருநாள் என்ற ரீதியில் ஆண்டு முழுவதும் நடைபெறும்.

ஆண்டுமுழுவதும் நடைபெறும் செயல்பாடுகளுள் வரும் மார்ச் 20,21 பகலிரவு சமநாள் (Equinox) அன்றிலிருந்து ஆரம்பமாகிறது. ஆர்வமுடைய பெற்றோர்கள், பொதுமக்கள் நேரில் வந்து கலந்துக்கொள்ளலாம். காலை பதினொரு மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை வந்துப் பார்க்கலாம். இதேபோன்ற செயல்பாடுகள் திருச்சி கே.கே நகர், ஆர்ச்சர்டு பள்ளி, நாகமங்கலம் கிரியா பள்ளியிலும் நடைபெறும். இன்று சரியானத் திசைகளை மாணவர்கள் கணக்கிட உள்ளார்கள். மேலும், சூரியன் தெற்குக் கோடியில் உதிக்கும் நாளில் மகரரேகை வழியேயும், வடக்கு கோடியில் உதிக்கும் நாளில் கடகரேகை வழியேயும் பயணிக்கும். கடகரேகையும், மகரரேகையும் நிலநடுக்கோட்டிலிருந்து 23.5 பாகை தள்ளி இருப்பவை. பூமியின் அச்சு 23.5 பாகை சாய்வாக இருந்தபடி சுழல்வதால், சூரியன் இவ்விரு ரேகைகளுக்கும் இடையில் பயணிக்கும். நட்டுவைக்கப்பட்ட குச்சியின் நிழலை ஓராண்டுக்குக் குறித்து வைப்பதன் மூலம் பூமியின் அச்சின் சாய்வு 23.5 பாகை என்ற முடிவை மாணவர்கள் எட்டலாம்.

பண்டைய வானியலில் பெரும்பாலானவற்றைக் கிரேக்கர்கள் கண்டுபிடித்தார்கள் என்று கூறும் நிலை இன்றுள்ளது. பூவி அச்சின் சாய்வை கிரேக்கர்கள் கண்டுபிடித்திருக்க முடியாது. ஏனெனில் சூரியனின் இந்த வட, தென் செலவுகள் கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையில் உள்ளவர்களால் மட்டுமே உணரமுடியும். கிரேக்கம் கடக ரேகையிலிருந்து தொலைவில் உள்ளது. அங்குச் சூரியன் வடக்கேயும், தெற்கேயும் பயணிக்காது. நிலநடுக்கோட்டை ஒட்டியுள்ளவர்களுக்கே இது நன்குத் தெரியும். ஓரிடத்தின் உச்சிப் பொழுது (Local Noon) உச்சிப் பொழுது எனில் அப்பகுதியில் சூரியன் தலைக்கு நேர் மேலே வரும் நேரம் என்பதைப் புரிந்துக்கொள்ளலாம். இது ஒவ்வொருநாளும் இடத்திற்கு ஏற்றவாறு மாறும். நாமிருக்கும் இடத்தின் அன்றைய உச்சிப் பொழுதைக் கணிக்கலாமா?

குச்சி ஒன்று செங்குத்தாக நடப்பட்டு அதன் நிழலின் நீளம் தொடர்ந்து குறித்துக்கொண்டு வாருங்கள். மதியம் 11:30 இலிருந்து நிழலின் நீளத்தை குறித்துக் கொண்டே வந்தீர்கள் என்றால் நிழலின் நீளம் குறைந்துக்கொண்டே வருவதைக் காண்பீர்கள். ஒரு நிலையில் நிழலின் நீளம் அதிகரிக்க ஆரம்பிக்கும். இப்போது மிகக் குறைவான நீளம் எந்த நேரத்தில் குறிக்கப்பட்டதோ அதுவே நீங்கள் இருக்கும் இடத்தின் அன்றைய உச்சிப் பொழுது அதாவது சரியான நண்பகல். இதையும் இன்று கணக்கிட உள்ளார்கள்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn