உயிருடன் இருப்பவர்களை சடலமாக படுக்கவைத்து சடங்குகளைச் செய்யும் விநோத திருவிழா

உயிருடன் இருப்பவர்களை சடலமாக படுக்கவைத்து சடங்குகளைச் செய்யும் விநோத திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பின்னத்தூரில் பொட்டல்மேடு என்ற இடத்தில் 21 தெய்வ ஆலயங்கள் உள்ளது தனிச்சிறப்பாகும். இங்குள்ள மாரியம்மன் மற்றும் கலுவடியான் கோவிலில் திருவிழா 9 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு கடந்த 4 ம்தேதி கரகம் பாவித்தல் மற்றும் காப்புகட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து தினசரி விநாயகர், கருப்பசாமி, எல்லையம்மன், பகவதி அம்மன், முத்தாலம்மன், காளியம்மன் என ஒவ்வொரு சுவாமிகளுக்கும் ஒவ்வொரு நாளும் பொங்கல் வைத்தல் நிகழ்வுகளும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று காலை மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல் ஆடு பலியிடுதல் மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

தொடர்ந்து பிற்பகல் சாமி கழுமரம் ஏறுதல் என்ற விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கழு மரம் என்று அழைக்கப்படும் பச்சை மூங்கில் மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கழுமரத்தை இளைஞர்கள் தோலில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றிவந்து கோவில் முன்பாக தோண்டப்பட்டிருந்த குழியில் ஊன்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பின்னர் அருள் வந்த பூசாரி கழுமரத்தின் மீது ஏறி குறிப்பிட்ட தூரத்தில் நின்று சாமி அழைக்கும் நிகழ்வும், இதனைத்தொடர்ந்து கழு மரம் இருந்த இடத்தின் கீழ் இரு சிறுவர்களை தரையில் படுக்கவைத்து இறந்த உடலுக்கு செய்வது போல் அவர்களது கை, கால்களைக்கட்டி வேட்டியால் உடலை மூடி மாலை அணிவித்து தாரை தப்பட்டை முழங்க இறந்தவருக்கும் செய்யும் சடங்குகளைச் செய்கின்றனர்.

இதேபோல் கழுமரத்தின் சற்று தொலைவில் ஒரு குழியில் உயிருடன் உள்ள ஒருவரை சடலம் போல் படுக்க வைத்து பச்சை தென்னை ஓலையால் மூடிவிட்டு அவரது உறவினர்கள் பொதுமக்களிடம் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிலையில் கழுமரத்தில் உள்ள பூசாரி அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஊர் பெரியவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கழுமரத்தில் இருந்து அருள்வாக்கு கூறினார்.

இதன் பின்னர் கழு மரத்தின் கீழே சடலமாக கிடத்தப்பட்ட சிறுவர்களை உயிர்பிக்கும் நிகழ்வும் தொடர்ந்து ஆடு பலியிட்டு அதன் குடலை எடுத்து அதனை மாலையாக கட்டி குழிக்குள் சடலமாக படுக்க வைக்கப்பட்டவரை எழுப்பி குடல் மாலையை அவருக்கு அணிவித்து, பின்னர் அங்கிருந்து கரும்புடையார் பாறை என்ற இடத்திற்கு சாமி செல்லும் நிகழ்ச்சிகள் நடை பெற்றது. பழைய ஐதீகத்தின் அடிப்படையில் பழைமை மாறாமல் நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவில் கழு மரத்தில் உள்ள மருளாளி நல்லவிதமாக வாக்கு கூறினால் ஊர் செழிப்பாகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த விநோத திருவிழாவில் பின்னத்தூர், வெள்ளையம்மாபட்டி, பெருமாம்பட்டி, கலிங்கிப்பட்டி, பலவாரப்பட்டி, தாதமலைப்பட்டி, பன்னாங்கொம்பு பண்ணப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாளை செவ்வாய்க்கிழமை கரகம் விடுதல், காப்பு அறுத்தல் மற்றும் சுவாமி வீட்டிற்குச் செல்லும் நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision