கோவிட்  தொற்று  வந்தும் பொருட்படுத்தாமல் 17 ஆண்டுகளாக தொடர்ந்து இறுதி சடங்குகளை செய்யும்  வயதான திருச்சி பெண்மணி!!

கோவிட்  தொற்று  வந்தும் பொருட்படுத்தாமல் 17 ஆண்டுகளாக தொடர்ந்து இறுதி சடங்குகளை செய்யும்  வயதான திருச்சி பெண்மணி!!
வீட்டில் ரெண்டாவது வரைக்கும்  பிடிக்க வைச்சாங்க .. 
என் மாமா முத்தையனையே   என்னுடைய 17 வயதில் திருமணம் செய்து கொண்டேன் என்று 60 வயதில் வெகுளியாக ஈடுகாட்டில் தன் துக்கத்தை மறந்து சிரித்த முகத்துடன் திருச்சி எடமலைபட்டி புதூர் பகுதியை சேர்ந்த மாரியாயி  பேசும் போது....
வீடு வரை உறவு ,வீதி வரை மனைவி,காடு வரை பிள்ளை என்பார்கள் ஆனால் கணவனின் வேலை இடுகாட்டு வேலை என்பதால் காடு வரை சென்று காட்டிலேயே  உழைத்துக் கொண்டிருக்கிறார் மாரியாயி. கணவனின் மனநிலையில் மாற்றம் குடும்ப சூழல் இப்படி எல்லாம் கணவரோடு சேர்ந்து வேலை பார்ப்பதை தவிர வேறு வழி இல்லை என்றபோது கணவனோடு சேர்ந்து மயானத்தில்  வேலையை கற்றுக்கொண்டு 17 ஆண்டுகளாக இறுதிசடங்குகளை   செய்து வருகிறார்.

சிலரது வாழ்க்கை கதைகள் இரக்கமற்றவர்கள்  இதயத்தை கூட ஒருநிமிடம் உறைய  செய்யும் அப்படி மயானத்தில் தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கும் மாரியாயின் வாழ்க்கைப்போராட்டத்தை  பற்றி  கேட்டறிந்த போது ஒரு கணம் அவர் நமக்கு வான் தேவதையாக தான் தெரிவார்.சிலரின் முடிவுகள் சிலரின் வாழ்வில் ஆரம்பமாக இருக்கும்  என்பது என் வாழ்க்கைக்கு பொருந்தும் இந்த  இடத்திற்கு யாரும் வரக்கூடாது என்று நினைக்கும் சூழலில் இது தான் என் வாழ்க்கைக்காண வாழ்வாதாரமாக மாறிப்போனது.

குழி வெட்டுவதற்கு மட்டும்தான் வேலையாட்களை வைத்து கொள்கிறேன். மற்றபடி 
இறந்தவர்களின் உடலை குளிப்பாட்டுவதிலிருந்து  வாக்கியரிசி போடுவது, எரிப்பது வரை எல்லா பணிகளையும் நானே
முன்னெடுத்து செய்வேன்.
கிராம வாசிகளும் என்னை நம்பி இதனை செய்வதற்கு  ஒப்புதல் அளித்த போது  துணிச்சலாக இதை செய்திட முடிவெடுத்தேன்.
எல்லாரும்  போல என் கணவரும் முதலில் இதற்கு வேண்டாம் என்றுதான் மறுத்துக் கூறினார். ஆனால் என் பிள்ளைகளை காப்பாற்றுவதற்கு அவரோடு இணைந்து இந்த வேலையை செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்பதை நான் முழுமையாக நம்பினேன்.
ஏன் என்று தெரியவில்லை வேறு வேலைக்கு சென்று இருக்கலாம் ஆனால் ஏனோ எனக்கு இதை செய்ய  தோன்றியது .இத்தனை ஆண்டுகள் இரவில்  தனித்து நின்று வேலை செய்வதற்கான தன்னம்பிக்கையும் தந்து கொண்டிருக்கின்றது.

என் கணவர் இறந்தபின்னும் தொடர்ந்து இந்த வேலையை 17 ஆண்டுகளாக நான் செய்து கொண்டிருக்கிறேன். ஊரில் இதுவரை என்னை யாரும் ஒதுக்கி பார்த்ததில்லை .இந்த வேலையை செய்கிறவள் என்று யாரும் என்னை ஒதுக்கிப் பேசியதும் கிடையாது.உறவினர்களும் என்னை ஒதுக்கியது கிடையாது.  அவர்கள் என்னை சமமாக நடத்தும் அந்த மனப்பான்மையே என்னை இன்னும் தைரியமாக நிற்கச் செய்கிறது.
 பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதுபோல என் பிள்ளையும் பொறுப்பற்றவனாக வேலைக்கு செல்லாமல் இருக்க குடும்பத்தை காப்பதற்கு இந்த வேலையை நாம் செய்தே ஆகவேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது. இனம் புரியா  தைரியம்  இன்னும் என்னை உறுதியோடு நிற்க செய்தது. என் கணவர், அவருடைய சகோதரர் என் மாமனார் என  தொடர்ச்சியாக இந்த பணியை தான் செய்து வந்தனர் .ஆனால் என் மகனையும் பேர குழந்தைகளையும்  கேட்டபோது இதையெல்லாம்  நாங்கள்  செய்ய மாட்டோம் என்றார்கள்.
 நாம் இருக்கும் வரை நாமே செய்துவிடலாம் என்ற துணிச்சலில் தான் செய்து கொண்டிருக்கிறேன். ஒருநாளும் இதுவரை இந்த இடத்தில் நிற்பதற்கு பயந்ததில்லை என் கணவர்  என்னுடன் இருக்கிறார் என்ற தைரியம்  கூடுதல் நம்பிக்கை எனக்கு. 

கொரோனா தொற்று ஏற்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  15 நாட்கள் தனிமைப்படுத்திய பின்பு வீட்டிற்கு வந்தபோது கூட இனியேனும் அங்கு  வேலைக்கு செல்லாதே என்று அனைவரும் என்னை வற்புறுத்தினார்கள். ஆனால் இந்த பணியை உயிர் உள்ளவரை செய்ய வேண்டும் என்று ஏதோ ஒரு உள்ளுணர்வு கூறியது. என்ன ஆனாலும் சரி என்று தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.
கோவிட் நேரத்திலும் கடந்த இரண்டு மாதங்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் தினமும் அடக்கம் செய்த நிலையிலும் தனது பதினேழு ஆண்டுகாலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இறுதி சடங்கு செய்து இருக்கிறேன் என துயர நேரத்தின் பணியாகவே குறிப்பிடுகிறார்.
 
வாய்ல மூக்குல துணி வச்சா சவம் தான் நாம் அனைவரும் என பேசும் இவர் இங்கு உதிர்ந்து கிடக்கும் பூக்களில் தான் என் வாழ்க்கை மலர்ந்து கொண்டிருக்கிறது. மாரியாயின்   வார்த்தைகள் வாழ்க்கையின் மீதான அவரது நம்பிக்கையின் வெளிப்பாடு . தமிழ்நாடு அரசு அறிவித்தது போல இவரை போன்றவர்களை முன்கள பணியாளர்களுக்கான உதவி செய்து தர வேண்டும் என்பது அனைவரின் எண்ணம்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW