மது அருந்தியபோது தகராறு - நண்பனை கொலை செய்த இளைஞர் கைது
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே காலச்சேரி ஊராட்சி ஜீவா நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் அஜித்குமார் (27). கூலித்தொழிலாளியான இவர் தனது நண்பர் சதீஷ் (29) உள்ளிட்ட 3 பேருடன் திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரை பகுதியில் தங்கி சாலை ஓரத்தில் சிமெண்ட் கற்கள் (பேவர் பிளாக்) பதிக்கும் வேலை செய்து வந்தார்.
கடந்த தீபாவளி தினத்தன்று அஜீத்குமார் சதீசும் இருவரும் சக தொழிலாளர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சதீஷ் அஜீத்குமாரை பாட்டிலால் தாக்கி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அஜீத்குமாரும் சதீஷ் இருவரும் தனித்தனியாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த சதீஷ், அஜீத்குமாரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
இதில் நிலைக்குலைந்து கீழே விழுந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கொண்டுவரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார், லால்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision