ANPR கேமரா மற்றும் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்
![ANPR கேமரா மற்றும் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்](https://trichyvision.com/uploads/images/202305/image_870x_646e1bdb38b8d.jpg)
திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், சாலை விபத்துக்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். திருச்சி மாநகரில் அடிக்கடி விபத்து நடக்ககூடியதாக கண்டறியப்பட்ட 31 இடங்களில் (Hotspots) 10 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகரும் 31 இடங்களில் அடங்கும்.
இது தவிர சஞ்சீவி நகர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும் என்பதை கண்டறிந்து இதை சீர்செய்யும் பொருட்டும், விபத்துகளை தடுக்கும் பொருட்டும் வாகன எண்களை கண்டறியும் உயர்ரக தானியங்கி ANPR கேமராக்கள்-2, CCTV கேமராக்கள்-6 மற்றும் ஒலிப்பெருக்கிகளுடன் கூடிய பொது விளம்புகை அமைப்பு (PA System) ஆகிய அம்சங்களுடன் கூடிய தானியங்கி போக்குவரத்து சிக்னலை திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, இன்று (24.05.23)-ந்தேதி காலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்ததார்.
இது போன்று திருச்சி மாநகரத்தில் குற்றம் நடவாமல் தடுக்க அதிக அளவில் கேமராக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் காவல் துணை ஆணையர் (வடக்கு), மாநகர ஆயுதப்படை கூடுதல் துணை ஆணையர், ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர், போக்குவரத்து காவல் உதவி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழா முடிந்த பின்னர் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மாநகர காவல் ஆணையர் நீர் மோர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மேலும் வெயிலில் நின்று பணிபுரியும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கும் நீர்மோர் வழங்கினார். திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூறின்றி சீராக இயங்கவும், பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து சிக்னல் ஏற்படுத்தப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.