கலைத்துறையில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு விருதுகள்

கலைத்துறையில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு விருதுகள்

திருச்சிராப்பள்ளித் தமிழிசைச் சங்கம் சார்பில் 195ஆவது நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கிராமியக் கலை நிகழ்வை வழங்கினார். கலைத்துறையில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. கி.ஆ.பெ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழிசைச் சங்கத்தின் இணைச் செயலாளர் பேராசிரியர் முனைவர் மாணிக்கம் வரவேற்புரையாற்றினார்.

சங்கத்தின் செயலாளர் புலவர். இராமதாசு தலைமையுரை ஆற்றினார். சிறப்புரையாற்றிய கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் தமிழைச்சங்கம் திருச்சியின் பண்பாட்டு அடையாளமாய்த் திகழ்கிறது. தொடர்ந்து தமிழுக்கும் தமிழிசைக்கும் பெருந்தொண்டாற்றிவரும் இவ்வமைப்பு மக்களால் கொண்டாடப்பட வேண்டும். வளரும் குழந்தைகள் தாய்மொழி வழியாக கற்றுக்கொள்ள பெற்றோர்கள் துணைபுரிய வேண்டும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு திறன்பேசி பயன்பாடு, இணையதளப் பயன்பாடு குழந்தைகள் சிறார்கள், மாணவர்கள் இளந்தலைமுறையிடம் அதிகரித்துள்ளது. யாவரும் யாவருடனும் பேசுவதும், உள்ள உணர்வுகளைப் பகிர்வதும் வெகுவாக குறைந்து மொபைலில் பகிரும் பழக்கத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.

பெற்றோர்களுக்கும் மனச்சிக்கல், பிள்ளைகளுக்கும் மன அழுத்தம் ஏற்பட்டு வருவதை தவிர்க்க முடியவில்லை. தாய்மொழிக் கல்வியில் பயில்பவர்கள் சிந்தனைத் தெளிவும், சமூக அக்கறையும், துணிவு கொண்டவர்களாக திகழ்கின்றனர். தாய்மொழியில் வல்லமை பெறாமல் ஆளுமை பண்பு வளராது. வீட்டில் நாம் ஒவ்வொருவரும் தமிழரின் இசைக் கலை மரபுகளை குழந்தைகளுக்கு கற்றுத்தர முன்வர வேண்டும். அதுவே குழந்தைகளுக்கு ஆளுமைப் பண்பை உருவாக்கும் அருமருந்தாகும் என்றார்-

முன்னதாக கலைத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்தக் கலைஞர்ளுக்குப் பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 34 ஆண்டுகளாக மேடைதோறும் தமிழிசையைப் பாடி தொண்டு செய்யும் பழனி இசைக்கலைஞர் ஞானசக்திவேல் அவர்களுக்கு "பண்ணிசைப் பாணர் விருது - 22 மற்றும் இணையர் ஸ்ரீவித்யா சக்திவேல் அவர்களுக்கு "நற்றமிழ் இசைவாணி" விருது - 22 வழங்கப்பட்டது. மணப்பாறை ஸ்ரீவாரி சதங்கை நாட்டியாலயா நடனப்பள்ளி நிறுவுநரும் கலைத்துறையில் சாதனைகள் பல புரிந்து வரும் வளரும் இளம் நடனக் கலைஞர் செல்வி.இரா. ஹரிணி ராஜன்பாபு அவர்களுக்கு" நாட்டியத் திலகம்" விருதும் சிங்கம்புணரியைச் சேர்ந்த மாணவி யோகக்கலையில் நடனத்தில் பல்வேறு சாதனை புரியும் செல்வி. ராகவர்த்தினிக்கு "ஒளிரும் மின்மினி" விருது வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இ.புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவியர்கள், திருநங்கை ஆயிஷா, செல்வன் ஆகாஷ் குழுவினர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலை நாடகத்துறை மாணவர் மணிகண்டன் குழுவினரின் பறை துடும்பிசை, செல்வன் கிளிண்டன், நாட்டுப்புற நடனக்குழு, விஜய்கிருஷ்ணகாந்த் கீ போர்டு, செல்வன். நிக்சன், பாஸ்டின் ராஜ் பாடல், மலர்மதியழகன் தவில், உள்ளிட்ட கிராமியக் கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டது. கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH           

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO