தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக மாநில தலைவர் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல் பேசக்கூடாது - திருமாவளவன்

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 31ஆம் தேதி மதச்சார்பின்மையை காப்போம் என்கிற மையக்கருத்தில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணி குறித்தான டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்,
அரசமைப்புக்கு எதிரான தாக்குதலை ஒன்றிய அரசு செய்து வருகிறது.குடியுரிமை திருத்த சட்டம் முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் மூலம்இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றாலும் கூட அவர்கள் செயல்படுவது அரசமைப்புக்கு எதிராக தான்.அரசமைப்பின் உயிர் மூச்சான கோட்பாடு மதச்சார்பின்மையாகும்.
அரசமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் வக்ஃபு திருத்த சட்டமாகும். அதனை ரத்து செய்ய வேண்டும், மதச்சார்பின்மையை காக்க வேண்டும் என வலியுறுத்தி தான் பேரணி நடைபெறுகிறது.
வடகாட்டில் ஆதி திராவிடர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கேட்டோம் ஆனால் காவல்துறை அனுமதி வழங்காததால் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. வரும் 19 ஆம் தேதி மாலை புதுக்கோட்டையில் வி.சி.க சார்பில் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியதற்கு பாரட்டுக்கள். அந்த வழக்கை விரைந்து முடித்த சி.பி.ஐ அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்.
பா.ஜ.க திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிரான கருத்துக்களை தான் கூறி வருகிறது. சட்டம் ஒழுங்கு தொடர்பாக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல் நயினார் நாகேந்திரன் பேச கூடாது. வடகாட்டு பிரச்சினை தொடர்பாக பா.ஜ.க எந்த கருத்தையும் கூறவில்லை, போராட்டமும் நடத்தவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசும் அவர்கள் ஜாதிய பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டும், மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும்.
பா.ம.க மாநாட்டில் கருத்தியல் ரீதியாக யாரும் பேசவில்லை உணர்ச்சியை தூண்டும் வகையில் தான் பேசியுள்ளார்கள். சமூக நீதியை குறித்தோ, மக்கள் நலன் சார்ந்த செயல் திட்டங்கள் குறித்தோ பேசாமல் வி.சி.க வை சீண்டும் வகையில் மாநாட்டில் பேசி உள்ளது ஏமாற்றத்தை தான் அந்த கட்சியில் தொண்டர்களுக்கு தந்துள்ளது.
அடங்க மறு அத்துமீறு என்கிற முழக்கம் குறிப்பிட்ட ஜாதிக்கான முழக்கம் அல்ல. அடக்குமுறைக்கு உள்ளாகும் வன்னியர் சமூகம் உள்ளிட்ட அனைவருக்கும் அது பொருந்தும். உலகத்தில் யார் ஒடுக்கப்பட்டாலும் ஒடுக்கப்படும் மக்கள் அஞ்சி ஒதுங்காமல் போர்குணத்தோடு வெகுண்டேழ வேண்டும் என்கிற அரசியல் முழக்கம் தான் அது.இதை ஒரு ஜாதிய முழக்கமாக சுருக்கி பார்க்கிறார்கள் இது அவர்களின் அணுகுமுறை என்று திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision