திருச்சியில் வாரச்சந்தைக்கு தடை - விவசாயிகள், நுகர்வோர் அதிருப்தி

திருச்சியில் வாரச்சந்தைக்கு தடை -  விவசாயிகள், நுகர்வோர் அதிருப்தி

திருச்சி மாநகரில் வாரச்சந்தைகளில், இடைத்தரகர் இல்லாமல் நுகர்வோருக்கு நேரடியாக காய்கறி உள்ளிட்ட விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்து வந்தது. அதேபோல் குறைந்த விலையில் விளைபொருட்களை வாங்கி நுகர்வோரும் பயனடைந்து வந்தனர்.

மேலும் அதிக தூரம் பயணம் செய்ய இயலாதவர்களின் அலைச்சலையும் வாரச்சந்தைகள் குறைத்தன. இதனால் வாரச்சந்தைகளுக்கு ஆதரவு பெருகி வந்த நிலையில் வாரச்சந்தைகளுக்குத் தடை விதிக்கும் மாநகராட்சியின் முடிவு அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் தடைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, வாரச்சந்தைகள் மூலம் மாநகராட்சிக்கு எவ்வித வருவாயும் கிடைப்பதில்லை என்றும், மாநகராட்சிக்கு வரிசெலுத்தி கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக புகார் கூறியதாலும், அவர்களுக்கு ஆதரவாக அரசியல்வாதிகளும் அழுத்தம் கொடுப்பதால் வாரச்சந்தைகளுக்குத் தடைவிதிக்க முடிவுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் முறைப்படி வரிசெலுத்தி லைசென்ஸ் பெற்று, தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்வோருக்கு இந்தத்தடை பொருந்தாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். லாபநோக்குடன் செயல்படும் வியாபாரிகளுக்கு ஆதரவாகவும், மாநகராட்சியின் வரிவருவாயையும் மட்டும் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனுள்ளதாக இருந்த வாரச்சந்தைகளுக்குத் தடைவிதித்திருப்பது விவசாயிகளிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது பிரச்சனை தொடர்பாக மாநகராட்சி அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது ஏற்கனவே மாநகரப் பகுதிகளில் மாநகராட்சி சந்தைகளுக்கு இடம் கொடுத்துள்ளது. அவர்கள் முறையாக வரிகட்டி அதனை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு மிக அருகாமையில் வாரச்சந்தையில் நடத்தினால் அவருடைய வியாபாரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததால் மாநகரப் பகுதிகளில் வாரச்சந்தைகளை நடத்தக் கூடாது என மாநகராட்சி தடைவித்துள்ளது. மாநகராட்சியிடம் உரிய தொகையை செலுத்தி அனுமதி பெற்று வார சந்தையை நடத்திக் கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே இருக்கும் சந்தைகளுக்கு அருகில் வார சந்தைகளில் நடத்த மாநகராட்சி அனுமதிக்காது என தகவல் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision