துலா மாத பிறப்பு - காவிரி ஆற்றில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தங்க குடத்தில் புனிதநீர்

துலா மாத பிறப்பு - காவிரி ஆற்றில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தங்க குடத்தில் புனிதநீர்

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்ப தால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படும். இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது. துலா (ஐப்பசி) மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி ரெங்கநாதரை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என்று பெரியவர்கள் கூறுவர்.

இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள். இந்த மாதம் முழுவதும் காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனித நீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனித நீர் கொண்டு செல்லப்படுகிறது.

துலா மாத பிறப்பையொட்டி காலை காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்தும், வெள்ளி குடங்களில் புனிதநீர் எடுக்கப்பட்டும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 10:0० மணிக்கு புறப்பட்டு 10:30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார்.

காலை 11:30 மணி முதல் பகல் 1:30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 5:30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். துலா மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும்.மேலும் மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், தாயார் தங்க ஆபரணங்கள் மற்றும் சாலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision