ஒப்பந்தக்காரர் மாடுகளை விற்பதாக மாட்டின் உரிமையாளர்கள் மேயரிடம் புகார்
திருச்சி மாநகரில் பல்வேறு பகுதியில் முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். திருச்சி கண்டோன்மென்ட், கல்லுக்குழி, கருமண்டபம், மத்தியப் பேருந்து நிலையம், தென்னூா் அண்ணா நகா், புத்தூா், கலெக்டா் ஆபீஸ் ரோடு, பீமநகா், பாலக்கரை, உறையூா், ஸ்ரீரங்கம், பொன்மலை, அரியமங்கலம், காட்டூா், திருச்சி ஏா்போா்ட் ஆகிய பகுதிகளில் ஏராளமான கனரக வாகனங்கள், பேருந்துகள் வந்து செல்கின்றன.
இந்தச் சாலைகளில், மாடுகள் பெருமளவில் திரிவதால், அடிக்கடி விபத்துக்குள்ளாகி வாகன ஓட்டிகள் படுகாயம் அடைகிறாா்கள். மேலும், இரவுகளில் சாலையின் நடுவே கூட்டம் கூட்டமாக படுத்துக் கிடக்கும் மாடுகள் கண்ணுக்குத் தெரியாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவற்றின் மோதி கீழே விழுந்து பெரும் விபத்துகள் அரங்கேறுகின்றன. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, சாலைகளில் திரியும் கால்நடைகளை மாநகராட்சி நிா்வாகம் பிடித்து அடைத்து வைத்து அபராதம் விதித்தது. இதில் சாலையில் திரியும் மாடுகளை பிடிப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தக்காரர்களை பணியமத்தியுள்ளது. இந்த ஒப்பந்தக்காரர்கள் பகலில் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அவற்றை உறையூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடைத்து வைப்பார்கள்.
ஆனால் தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஒப்பந்தக்காரர் ராக்கெட் தமிழ்ச்செல்வன் என்பவர் இரவு நேரங்களில் மட்டும் சாலையில் திரியும் மாடுகளை பிடிப்பதாகவும், அவற்றை வாகனத்தில் ஏற்றும் போது மாடுகளுக்கு காயம் ஏற்படுவதாகவும், மேலும் மாடுகளை விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் மாடு வளர்போர்கள் இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இடம் புகார் மனு அளித்தனர்.
அதில் சாலையில் திரியும் மாடுகளை பிடிக்கும் ஒப்பந்தக்காரர் ராக்கெட் தமிழ் செல்வன், தங்களது மாடுகளை பிடித்து விற்றுள்ளதாகவும், மாநகராட்சி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள மாடுகளுக்கு முறையாக உணவு கொடுப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இது மட்டுமின்றி சாலையில் திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO