திருச்சியில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் - காவல்துறையினர் கார் கண்ணாடி உடைப்பு

திருச்சியில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் - காவல்துறையினர் கார் கண்ணாடி உடைப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கொளக்குடி கிராமத்தில் இரு தரப்பினரிடையே பட்டாசு வெடித்தது தொடர்பாக  ஏற்பட்ட தகராறு காரணமாக நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினரின் கார்
கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொட்டியம் தாலுகாவில் கொளகுடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவர்களது சமுதாயத்தை சார்ந்த சங்கத்தின் பெயர் பலகையை வைத்துள்ளனர். இதன் அருகே
மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்த நிலையில் பட்டாசு வெடித்ததால் இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இருவர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினரின் கார்  கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி
மேற்பார்வையில், முசிரி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தகராறில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி உறுதியளித்தார். மேலும் வருவாய்த் துறையினரின் உதவியோடு அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சங்க பெயர் பலகையை உடனடியாக காவல்துறையினர் அகற்றினர். அதன் பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் கொள்ளகுடி கிராமத்தில்  அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision