நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு!!
திருச்சி மாவட்டத்தில் தசை சிதைவு மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி பெற்றிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் சு. சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisement
தசை சிதைவு மற்றும் விபத்தினாலோ (அல்லது) நோயினாலோ முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டு வருகிறது. பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி பெற விரும்புவோர் 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டவராகவும், கைகளால் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியை இயக்க முடிந்தவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் வாங்க மானியம் பெறாதவர்களாகவும் மற்றும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறாதவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
Advertisement
மேலே குறிப்பிட்ட தகுதிகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை ( அனைத்து பக்கங்களும்), உணவுப் பொருள் வழங்கல் அட்டை ( ரேசன் கார்டு), ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் 2 ஆகியவற்றுடன் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்:0431-2412590-ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய