வலசை பறவைகளின் வருகையால் வேடந்தாங்கல் போல் காட்சி அளிக்கும் கிளியூர் ஏரி
மனித இனத்துக்கும் இயற்கைக்கும் உற்ற நண்பனாக பறவையினங்கள் உள்ளன. அத்தகைய பறவை இனங்கள் தட்பவெப்ப பருவ நிலைக்கு ஏற்ப நாடு விட்டு நாடு இடம் பெறுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த கிளியூர் கிராமத்தில் உள்ள சுமார் 380 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் நிறைந்த கிளியூர் ஏரியில் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் இறுதி வரை சுமார் 180 க்கும் மேற்பட்ட பறவையை இனங்கள் வந்து செல்கின்றன.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய முதல் ஐரோப்பிய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் இருந்து பறவை இனங்கள் வர தொடங்கியுள்ளது. தற்பொழுது இந்த ஏரியில் வெள்ளை அரிவாள் மூக்கன், உன்னி கொக்கு, பாம்பு தாரா, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, கொண்டை நீர் காகம், ஊசிவால் வாத்து, நீலச்சிறவி வாத்து, பழுப்பு கீச்சான்கள் உள்ளிட்ட பறவையை இனங்கள் வரத் தொடங்கியுள்ளது.
இன்னும் நிறைய வெளிநாட்டு பறவையினங்கள் வந்து செல்லும் இடமாக இந்த கிளியூர் ஏரி இயற்கையாகவே அமைந்துள்ளது. மேலும் இங்கு வரக்கூடிய பறவை இனங்கள் கூடுகள் கட்டி இனப்பெருக்கம் செய்து வருகின்றனர். தற்பொழுது இந்த ஏரியில் போதுமான அளவு நீர் நிரம்பி இருந்தாலும், ஏரியில் காட்டாமணக்கு செடி முளைத்து ஏரியை ஆக்கிரமித்து வருகின்றன. இதனை அகற்றி பறவை இனங்கள் வந்து தங்குவதற்கு ஏதுவாக ஏரியின் நடுவில் மரங்களை வளர்க்க வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் பறவை இனங்களை பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது போன்ற நீர்நிலைகளை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision