94 கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்ட விரோத செயல்பாடுகள் முற்றிலுமாக ஒழிப்பு - மத்திய மண்டல ஐ.ஜி

94 கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்ட விரோத செயல்பாடுகள் முற்றிலுமாக ஒழிப்பு - மத்திய மண்டல ஐ.ஜி

மத்திய மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் தீவிர தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுவிலக்கு குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறும் 299 கரும்புள்ளி கிராமங்கள் மத்திய மண்டலத்தில் கண்டறியப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் காவல்துறையினரால் தீவிரப்படுத்தப்பட்டன.

காவல்துறையினரால் அனைத்துக் கரும்புள்ளி கிராமங்களிலும் தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்பட்டதுடன், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்ட விரோத சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வும் மற்றும் குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கான மறுவாழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய மண்டலத்தில் காவல் துறையினரால் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் மூலமாக, கள்ளச் சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது 94 கரும்புள்ளி கிராமங்களில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, கரும்புள்ளி கிராமங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. 

அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 50 கிராமங்களிலும், திருச்சி மாவட்டத்தில் 19 கிராமங்களிலும் மதுவிலக்கு குற்றச் சம்பவங்கள் நிகழ்வது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் உத்தரவின் பேரில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தாலுக்கா காவல் நிலையத்தினர் மற்றும் மது விலக்கு காவல்துறையினர் மது விலக்கு குற்றச் சம்பவங்கள் நிகழும் கரும்புள்ளி கிராமங்களில் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், குற்றவாளிகள் திருந்தி மறுவாழ்வு பெற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவர்களுக்கு வேறு தொழில் தொடங்க தேவையான உதவிகளை மேற்கொண்டு வருவதுடன் கரும்புள்ளி கிராமங்கள் முற்றிலுமாக ஒழித்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 299 கிராமங்களில் நடத்தப்பட்ட கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கையில் 94 கிராமங்களில் முழுவதுமாக கள்ளச்சாரயம் காய்ச்சுதல் போன்ற சட்ட விரோத செயல்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன என்று மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷணன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn