அக்னி நட்சத்திரம் நிறைவு - சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம்

அக்னி நட்சத்திரம் நிறைவு - சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம்

புராணத்தில், அக்னி நட்சத்திரம் முடிவடையும் நாள், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனால், பெரும்பாலான கோயில்களில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடைபெறுகிறது. யமுனை நதிக்கரையில் இருந்தது காண்டவ வனம். சுவேதசி என்ற மன்னனுக்காகத் துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார்.

யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானார். அதனால் அக்னி பகவான் அவரை மந்த நோய் தாக்கியது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் உள்ள காண்டவ வனத்தை எரித்த நாள்களே அக்னி நட்சத்திர நாள்களாகப் புராணத்தில் கூறப்பட்டுள்ளன. அக்னி பகவான் முதல் ஏழு நாள்கள் வனத்தில் உள்ள மூலிகைகளை எரித்தார். அடுத்த ஏழு நாள்கள் மரங்களை உணவாகக் கொண்டார். அடுத்த ஏழு நாள்கள் எஞ்சியவற்றை உண்டு விடைபெற்றுச் சென்றார். இதனால், இந்த அக்னி நட்சத்திர காலம் தோஷமானவை என்று கருதி, சுப காரியங்களைத் தவிர்த்து விடுவார்கள். 

இந்த ஆண்டு தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. அக்னி நட்சத்திர தோஷ காலம் முடியும் நாளிலும், அதன்பிறகும் எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இதை அக்னி கழிவு என்றும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி என்றும் கொண்டாடுவார்கள். இந்த நிவர்த்தி பூஜை மற்றும் மகா அபிஷேகத்தின் போது அம்மனை வணங்கினால் நம் தோஷங்கள் அனைத்தும் விலகும்; வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் ஐதிகம்.

இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னி நட்சத்திர நிவர்த்தி தோஷத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், திரவியப் பொடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision