மகளிர் உரிமைத் தொகை கிடைத்ததா? என கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலினிடம் கிடைக்கவில்லை என பெண்கள் பதில் அளித்ததால் பரபரப்பு

மகளிர் உரிமைத் தொகை கிடைத்ததா? என கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலினிடம் கிடைக்கவில்லை என பெண்கள் பதில் அளித்ததால் பரபரப்பு

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் இடையே அங்கு கூடியிருந்த பெண்கள் பலரும் எங்களுக்கு மகளிர் உரிமைத்துறை கிடைக்கவில்லை அதைப் பற்றி பேசுங்கள் என கூறினார்.

இருங்கம்மா வரேன் அத பத்தி பேசுறேன் என டென்ஷனான உதயநிதி ஸ்டாலின், மைக்கை நீட்டி நீ வேணா பேசுறீயா என பெண் ஒருவரிடம் ஒருமையில் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் அங்கு கூடியிருந்த கூட்டத்தினரை பார்த்து மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கிடைத்ததா? என கேள்வி எழுப்பினார். ஆனால் அங்கு கூடி இருந்த பெண்களோ உரிமைத்தொகை எங்களுக்கு கிடைக்கவில்லை! என பதில் அளித்து கூச்சலிட்டதால், உங்கள் யாருக்குமே கிடைக்கவில்லையா? என அவர்களை சமாதானம் செய்த உதயநிதி ஸ்டாலின் தகுதி உள்ள அனைவருக்கும் தேர்தல் முடிந்து ஐந்தாறு மாதத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர் ஒருவர் மகிழ்ச்சியின் ஆரவாரத்தை வெளிப்படுத்தும் விதமாக, கட்சிக் கொடியை கையில் ஏந்தி அசைத்துக் காண்பித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உதயநிதி ஸ்டாலின் அண்ணே கொடிய கொஞ்சம் இறக்குங்க அண்ணே அஞ்சு நிமிஷம் தான் பேசிட்டு இங்க இருந்து ஓடிடுவேன். நேற்று ஒரு நாள் முழுவதும் திருமா அண்ணனுக்கும், ரவிக்குமாருக்கும் பிரச்சாரம் செய்தேன் எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே, கூட்டத்திலிருந்த திமுகவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரின் கையில் இருந்த அந்த கொடியைப் பிடுங்கி அப்புறப்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தத் தொண்டர் எனது கட்சி கொடியை ஏன் புடுங்குறீங்க கொடுங்க என கூச்சலிட்டதால், கொடிக்கு நான் பொறுப்பு அண்ணே கண்டிப்பா வாங்கி கொடுத்து விடுகிறேன் என கூறியதும், கட்சிக்கொடி மீண்டும் அந்த தொண்டரிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சை தொடர்ந்தார்.

இதனைக் கேட்ட பெண் ஒருவர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பாரபட்சமின்றி காலை உணவு வழங்குங்கள் என குரல் கொடுத்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, அந்தப் பெண்ணை சமாதானம் செய்யும் வகையில், தலைவர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மட்டுமல்லாது, எட்டாம் வகுப்பு வரை யிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். அமைச்சரின் மகனான அருண் நேருவை ஆதரித்து பெரம்ப லூரில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த உதயநிதி ஸ்டாலினை கூட்டத்தில் இருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அடுத்தடுத்த கேள்விகளால் அதிர வைத்ததால், வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடுமோ என திமுகவினர் அதிர்ச்சியடை ந்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision