கேரளா மாநிலத்திற்கு நேரடி விமான சேவை - திருச்சி விமான நிலையம் வேண்டுகோள்!!

கேரளா மாநிலத்திற்கு நேரடி விமான சேவை - திருச்சி விமான நிலையம் வேண்டுகோள்!!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கிழக்காசிய நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. இதில் தாய்லாந்து விமானசேவை முதற்கொண்டு பல நாடுகளுக்கு பயணிகளிடம் வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் தான் நம்முடைய பக்கத்து மாநிலமான கேரளாவிற்கு நேரடி விமான சேவை வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பல நாடுகளுக்கும், உள்நாட்டை பொறுத்தவரை முக்கியமான நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை பல நகரங்களுக்கும் திருச்சியில் இருந்து விமான சேவை உள்ளது. ஆனால் கேரளாவில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சின், கண்ணூர் என முக்கியமான சர்வதேச விமான நிலையங்களுக்கு நேரடி சேவை இல்லை.

குறிப்பாக கொச்சின் மற்றும் கோழிகோட்டுக்கு இங்கிருந்து அதிகமான மக்கள் சுற்றுலாவிற்காக செல்வார்கள், அங்கிருந்து வேளாங்கண்ணி மற்றும் நாகூர், கும்பகோணம் பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றளவிற்காக வருவார்கள், பெரும்பாலும் இதற்கு நேரடி பேருந்து மற்றும் ரயில் வசதிகளும் குறைவு. 2009க்கு முன்பு திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், கோழிகோடுக்கும் தினசரி விமான சேவையை இந்தியன் ஏர் லைன்ஸ் செய்து வந்தனர்.

அதன்பின் இந்தியன் ஏர் லைன்ஸ் ஏர் இந்தியாவுடன் இணைந்தபின் இந்த சேவை நிறுத்தப்பட்டது. அது தற்போது வரை தொடங்கப்படவே இல்லை. ஆன்மீக சுற்றுலா மட்டும் இல்லாமல், கேரளா விமான நிலையங்களை பொறுத்தவரை வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமான சேவை அதிகம், அதேபோல திருச்சியில் கிழக்காசிய விமான சேவை அதிகம் இதனை இரண்டு மாநிலங்களும் பயன்படுத்தி கொள்ளும் வண்ணம் இரு மாநிலங்களுக்கும் விமான சேவை முக்கியமாகிறது.

அதேபோல சுற்றுலாதுறையை இரண்டு மாநிலங்கள் வளர்க்கவும், குறைவான விலையில் பொதுமக்கள் விமான சேவையை பயன்படுத்தவும் கேரளாவிற்கு விமான சேவை அவசியமாகிறது. ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் தற்போது உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் திருச்சியிலும் சேவையை ஆரம்பிக்கலாம், அதேபோல இண்டிகோவும் உள்நாட்டு சேவையில் திருச்சி-கொச்சின் விமான சேவை ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision