திருச்சி உய்யக்கொண்டானை காக்க அதிகாலையிலேயே கொட்டும் மழையிலும் 2000 பேர் விழிப்புணர்வு பேரணி:
அசுத்தம் செய்பவர்கள் இல்லை என்றால் சுத்தம் செய்பவர்கள் தேவையில்லை தான். இருந்தாலும் மனிதனின் குணத்தை மாற்றுவது சிரமம் தான். சென்னையில் கூவம் எப்படியோ அதுபோலவே திருச்சியில் உய்யக்கொண்டான் ஆறும் மாற இருந்த நிலையில் தான் 5 பேர் கொண்ட குழுவால் ஆரம்பிக்கப்பட்ட சிட்டிசன் ஃபார் உய்யக்கொண்டான் என்னும் குழு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடி உய்யகொண்டானுக்கு உயிர் கொடுத்து வந்தனர். அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணத்தின் தொடர்ச்சி இன்றோடு இதன் 100 வது வார வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை எப்படியோ அதுபோலவே உய்யக்கொண்டான் ஆறும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆறு நீண்ட வரலாற்றையும் தனிச் சிறப்பையும் பெற்றது.
சுமார் 1000 ஆண்டுகளை கடந்து இன்றளவும் திருச்சியின் மையப்பகுதியில் ஓடிக்கொண்டிருக்கிறது. அன்றைய தொழில்நுட்பங்களோடு கட்டப்பட்ட இந்த ஆறு சுமார் 8 கிலோமீட்டர் வரை திருச்சியை கடந்து செல்கிறது. இந்த கால்வாயால் விவசாயிகளுக்கு சுமார் 32,742 ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறுகின்றன.
காலத்தின் மாற்றத்தாலும் நாகரீக வளர்ச்சியினாலும் திருச்சியின் கழிவுகளே இதில் கலக்கும் கவலை நிலையையே உண்டாக்கி உள்ளது. முப்போகம் விளையும் கால்வாயில் இப்போது மூக்கை மூடி கடக்கும் அவல நிலை உண்டாகி உள்ளது.இந்த அவலநிலையை போக்கவே திருச்சி “சிட்டிசன் ஃபார் உய்யக்கொண்டான்” குழுவால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுத்தம் செய்யப்பட்டு வந்தது.ஆறு ஓரங்களில் உள்ள பகுதிகளில் குப்பைகளை அகற்றியும் புதர்களை அகற்றியும் கழிவுகளை நீக்கியும் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். இன்று இதன் 100 வார விழாவில் விழிப்புணர்வு பேரணியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நீதிமன்ற சாலை வழியாக அண்ணாநகர் உழவர் சந்தை மைதானம் வரை நடைபெற்றது.
இவ்விழாவில் திருச்சியை சேர்ந்த தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் தேசியக் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, சாராநாதன் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி,கீ.ஆ.பே மருத்துவ கல்லூரி பிராட்டியூர் அரசு நடுநிலைப்பள்ளி, திருச்சி மாநகராட்சி பள்ளிகள், NCC ,NSS அமைப்பு, Rotary Club of Diamond City Queens, Rotary Club Shakti, Trichy Rockcity, Trichy Midtown, MST solutions,VDart Group, IDC technologies,ICICI foundations சார்பில் இருந்தும் திருச்சி பொதுமக்களும் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியை துவக்கி வைத்து விழாவிற்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கர், மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவில் சிறப்பாக திருச்சி சரஸ்வதி காஃபே மூலம் 1500க்கும் மேற்பட்ட நெகிழி இல்லாத தேநீர் குவளைகள் மூலம் தேனீர் ஏற்பாடு செய்தனர். கலைநிகழ்ச்சிகளும் பள்ளி மாணவர்களின் பறையாட்டமும் வந்தோர்களை வெகுவாகக் கவர்ந்தது.