கொரோனா தொற்றால் உயிர் தியாகம் செய்த முன்கள பணியாளர்களுக்காக காவேரி மருத்துவமனையின் மெய்நிகர் மாரத்தான் - குடும்பங்களுக்கு 5 லட்சம் நிதியுதவி!!
திருச்சி காவேரி மருத்துவமனையின் மாரத்தான் என்றால் திருச்சியே ஒரு மாதம் முழுவதும் களை கட்டி காணப்படும். மாரத்தான் ஆரம்பிப்பதற்கு முன்பும் அதற்கு பின்பும் கூட இதே பேச்சாக இருக்கும். திருச்சியில் அவ்வளவு பிரசித்தி பெற்ற மாரத்தான் போட்டி இந்த வருடம் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மெய்நிகர் மாரத்தானாக நடைபெற்றது.
Advertisement
ஒவ்வொரு ஆண்டும் உலக இருதய தினத்தை முன்னிட்டு இருதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி திருச்சி காவேரி மருத்துவமனையில் மாரத்தான் நடைபெறும். இந்த வருடம் கொரோனா தொற்றால் போராடி உயிர்த்தியாகம் செய்த முன்கள பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த மெய்நிகர் மாரத்தான் 2, 5, 10 மற்றும் 21 கிலோமீட்டர் பிரிவுகளில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி ஆரம்பித்து அக்டோபர் 8ம் தேதி வரை 10 நாட்களாக நடைபெற்றது. இந்த மெய்நிகர் மாரத்தானில் ஒவ்வொரு வீரர் கடக்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு 10 ரூபாய் வீதம் உயிர்த் தியாகம் செய்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது
அதன் அடிப்படையில் இந்த மெய்நிகர் மாரத்தானில் பங்கு பெறும் நபர்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்து அவர்களால் முடிந்த தொலைவு வரை பங்கேற்க செய்தனர். தமிழகம் முழுவதும் 2 கிலோ மீட்டர் பிரிவில் 1008 நபர்களும், 5 கிலோ மீட்டர் பிரிவில் 1748 நபர்களும், 10 கிலோ மீட்டர் பிரிவில் 1846 நபர்களும், 21 கிலோ மீட்டர் பிரிவில் 994 நபர்களும் கலந்து கொண்டனர். மொத்தமாக 5596 நபர்கள் சேர்ந்து 50,090 வெற்றிகரமாக கடந்து மெய்நிகர் மரத்தானை பூர்த்தி செய்தனர்.
Advertisement
அந்த வகையில் காவேரி மருத்துவமனை அறிவித்தபடி கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் வீதம் 50,090 கிலோ மீட்டருக்கு 5,00,090 ரூபாய் காசோலையை காவேரி மருத்துவமனையில் செயல் இயக்குனர் மற்றும் CII அமைப்பின் திருச்சி மண்டல துணைத் தலைவர் மருத்துவர் செங்குட்டுவன், CII திருச்சி மண்டல தலைவர் வாசுதேவன், YI அமைப்பின் திருச்சி மண்டல தலைவர் கேதன் ஜே வோரா, துணைத் தலைவர் காவிரி அண்ணாமலை ஆகியோர் இணைந்து இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் (IMA) தலைவர் மருத்துவர் குணசேகர், செயலாளர் மருத்துவர் செந்தில் வேல் முருகன், பொருளாதார செயலாளர் மருத்துவர் செந்தில் குமார், நுண்கலை செயலாளர் மருத்துவர் திருப்பதி ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
மேலும் இது குறித்து காவேரி மருத்துவமனையில் செயல் இயக்குனர் மருத்துவர் செங்குட்டுவன் கூறுகையில்... "இந்த இக்கட்டான கால நிலையில் மருத்துவ முன்கள பணியாளர்களின் பங்கு இன்றியமையாதது. அவர்களில் பலர் மக்களுக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு தங்களால் ஆன உதவியை மக்களோடு சேர்ந்து செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என கூறினார்