பார்வையற்றோர் வசிக்கும் கிராமத்தையே தத்தெடுத்து உதவி வரும் திருச்சி சமூக ஆர்வலர்கள்
திருச்சி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோர் குடும்பத்தினர்கள் வசிக்கும் ஒரு கிராமத்தையே தத்தெடுத்து தொடர்ந்து கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கி திருச்சி சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
Advertisement
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயினை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு காரணமாக பலரும் சொல்லொணாத் துயரில் திண்டாடி வருகின்றனர். இதிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் நிலைமை நினைத்தால் கண்ணீர் மட்டும்தான் மிஞ்சும்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே காந்திநகர் பகுதியில் சுமார் 85-க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம் தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஊதுபத்தி, தீப்பெட்டி, பேனா போன்ற பொருட்களை விற்று இந்த சமூதாயத்தில் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் தாங்கள் இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதாகவும் உதவி கோரியிருந்தனர்.
இதனை அறிந்த திருச்சி சமூகநல ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் சார்பாக முதற்கட்டமாக சில நாட்களுக்கு முன்பு அங்கு உள்ள 25 பார்வையற்றோர் குடும்பங்களுக்கும் அத்தியாவசிய பொருட்களான 10 கிலோ அரிசி மற்றும் 3 கிலோ பருப்பை நேரில் சென்று வழங்கிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் நேரில் சென்று அக்குடும்பங்களின் நிலைமையை பார்த்த சமூக ஆர்வலர்கள் மீண்டும் அடுத்த கட்டமாக ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து பத்து வகையான காய்கறி தொகுப்புகளையும் ஒருவாரத்திற்கு தேவையான காய்கறிகளையும் சுமார் 85 குடும்பங்களுக்கு வழங்கினார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத இந்த பார்வையற்ற குடும்பத்தினர் இதற்காக கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து பொருள்களை வாங்கி சென்றனர்.
மேலும் இந்த கிராமத்திற்காக தமிழக சமூக ஆர்வலர்கள் திருச்சி ராஜ ராஜேஸ்வரி,தூத்துக்குடி ஜான் ரவி, கீர்த்தி வாசன்,சித்தார்த்காசி விஸ்வநாதன், பூபாலன்,கண்ணூர் சுரேஷ் கிருஷ்ணா, ராஜ் குமார், மிலிட்டரி நடராஜன் ஆகியோரின் முயற்சி மற்றும் பண உதவியாலும், மேலும் ஸ்ரீரங்கம் ஆண்கள் சுய உதவி குழுவும் சேர்ந்து இந்த கிராமத்தையே தத்தெடுத்து உதவி வருகின்றனர். இனி வரும் காலங்களிலும் நாங்கள் தொடர்ந்து எங்களால் ஆன உதவிகளை செய்து வருவோம் என்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய