அதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு - அசத்தும் முதுகலை பட்டதாரி!

அதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு - அசத்தும் முதுகலை பட்டதாரி!

விவசாயம் நாட்டின் முதுகெலும்பு. இந்த நவீன யுகத்தில் சொகுசு கார், நல்ல நிறுவனத்தில் வேலை இருந்தால் தான் மதிப்பாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு மத்தியில் முதுகலை தாவரவியல் படித்துவிட்டு மாறுபட்ட முறையில் விவசாயம் செய்து மகசூல் குவிக்கும் விவசாயி பற்றிய சிறப்பு தொகுப்பு தான் இது!

Advertisement

திருச்சி சிறுகமணி பகுதியை சேர்ந்தவர் சரவணன். முதுகலை தாவரவியல் படித்துவிட்டு தற்போது விவசாயம் செய்து வருகிறார். புரட்டாசி மாசம் ஆரம்பித்தாலே நெல் நடவும் பணியில் விவசாயிகள் களம் இறங்குவர். ஆனால் விவசாயி சரவணன் முற்றிலும் மாறுபட்ட முறையில் ட்ரம் சீடர் முறையை கொண்டு குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதற்காக நெல் நடவில் இறங்கியுள்ளார்.

முதுகலை பட்டதாரி விவசாயி சரவணனிடம் பேசினோம்... "சென்ற வருடம் உளுந்து பயிரிட்டு அதில் அதிக மகசூல் ஒரு ஏக்கருக்கு 85 கிலோ என எடுத்து அவார்டும் வாங்கினேன். இந்த வருடம் நெல் நடவு செய்யலாம் என அதற்கான வேலைகளில் துவங்கியுள்ளேன். இதில் அக்சயா பொன்னி என்னும் சன்னரகம் பயிர் பண்ணுகிறேன். இந்த டிரம் சீடர் முறையில் குறைந்த அளவில் அதிக மகசூலை பெறலாம். ஒரு ஏக்கருக்கு 7 கிலோ நெல் இருந்தால் போதுமானது. நாம் சாதாரண பாரம்பரிய நடைமுறையில் நடும் போது ஒரு ஏக்கருக்கு 30 கிலோ நெல் தேவைப்படுகிறது. ஆனால் இந்த டிரம் சீடர் முறையில் சன்ன ரகமாக இருந்தால் 7 கிலோ முதல் 8 கிலோ வரையிலும் , அதுவே மோட்டா ரகமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 12 கிலோ விதை அளவு மட்டுமே தேவைப்படும். சாதாரணமாக நாற்று நட்டு நடவு செய்ய வேண்டும் என்றால் இதற்கு மூன்றில் ஒரு பங்குதான் விதை இதற்கு தேவைப்படுகிறது.

Advertisement

இந்த டிராம் சீடர் முறையில் விவசாயம் செய்வதால் எனக்கு அதிகமான தொகை மிச்சமாகிறது. நாற்று நட்டு நடவு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு கூலி மட்டுமே 4000 ஆகிறது. இந்த ட்ரம் சீடர் நாளைக்கு 200 ரூபாய் மட்டுமே வாடகை. அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் வேலை ஆட்கள் கிடைப்பது சிரமமாகவே இருக்கிறது. எனவே ஒரே ஆளாக நானே தினமும் இரண்டரை ஏக்கர் நெல்லை நேரடியாக விதைத்து வருகிறேன். நாலு மணி நேரத்தில் ஒரு ஏக்கரில் ட்ரம் சீடர் மூலம் ஓட்டிவிட்டேன். இந்த டிரம் சீடர் முறையில் பயிர் பண்ணுவதால் பயிர் ஒரே சமச்சீராக குத்துக்கள் முறையில் கிடைக்கிறது. இந்த குத்துக்கள் முறையில் பயிர் கிடைப்பதால் நமக்கு தானாகவே மகசூல் அதிகம் வந்து விடுகிறது.

இந்த ட்ரம் சீடர் முறையில் நடவு செய்வதால் நேராக நடவு செய்ய முடிகிறது. இதனால் களை எடுப்பது, மருந்து அடிப்பது, தண்ணீர் பாய்ச்சுவது, பயிருக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது போன்றவை எளிதில் அமைகிறது. வரிசை நடவு செய்வதால் எலி வெட்டுதல் என்பது மிகக் குறைவாக இருக்கிறது. எனவே இதன் மூலம் நடவு செய்தால் ஏக்கருக்கு 60 முதல் 62 மூட்டை நெல் கொள்முதல் செய்யலாம்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் இந்த டிரம் சீடர் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வாடகைக்கு கொடுக்கப்படுகிறது. 6000 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்கிறார் விவசாயி சரவணன்!