திருச்சி முசிரி லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் ஆவணம் சிக்கியதாக தகவல் - அதிமுகவினர் வருகை பரபரப்பு
திருச்சி முசிறி எம்ஐடியில், தற்போது இளங்கோவன் மகன் பிரவீன் குமாரை அழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆத்தூர் புத்திரகவுண்டன்பாளயதைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர்
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவராகவும், சேலம் புறநகர் அம்மா பேரவை செயலாளராகவும் உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி முசிரியில் நடைபெறும் இச்சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். விசாரணைக்காக போலீசார் அழைத்ததின் பெயரில் இளங்கோவனின் மகன் பிரவீன்குமார் முசிறி எம்ஐடி கல்லூரிக்கு வந்தார். அவர் எம்.ஐ.டி கல்வி நிறுவனங்களின் துணை தலைவராவார். இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தொடர்ந்து ஆவணங்களையும் சரிபார்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.முசிரி எம்.ஐ.டி பாலிடெக்னிக் கலை அறிவியல் கல்லூரிக்கு அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் வந்தனர்.
அப்போது பேசிய பரஞ்சோதி கடந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திமுக, மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், அதிமுகவை அழித்தொழித்துவிட முடியும் என நம்பி, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளது வீடுகளிலும், நிறுவனங்களிலும் சோதனை நடத்தி வருகிறது.
ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுக இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. இந்த சோதனைகளை சட்டரீதியாக சந்திப்போம் என முன்னாள் அதிமுக அமைச்சர் பரஞ்சோதி தெரிவித்தார்.
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn