மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக நேற்று பெறப்பட்டது குறித்து மருத்துவமனை முதல்வர் மருத்துவர். K. வனிதா அவர்கள் கூறியதாவது,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகில் இருக்கும் கொடும்பாளூரைச் சேர்ந்த 27 வயது வாலிபர் 1.5.2022 அன்று சரக்கு ஆட்டோ ஓட்டிச் சென்றபோது விபத்து ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6.5.2022 அன்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு 8.5.2022 அன்று மூளைச்சாவு அடைந்தார். மூளைச்சாவு அடைந்ததை மூளை நரம்பியல் மருத்துவர் ராஜசேகர் மற்றும் மூளை நரம்பு அறுவை சிகிச்சை மருத்துவர் முத்துராமன் ஆகியோர் உறுதி செய்தனர்.

உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா மூளைச்சாவு அடைந்தவரின் குடும்பத்தாரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து விளக்கிக் கூறி ஒப்புதல் பெற்றார். இதனையடுத்து, மயக்கவியல் துறைத்தலைவர் மருத்துவர் சிவக்குமார், மருத்துவர் இளங்கோ ஆகியோரின் துணையுடன் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் பிரபாகரன், மருத்துவர் ரவி , சிறுநீரக மருத்துவத் துறை தலைவர் பாலமுருகன், சிறுநீரக மருத்துவர். மைவிழி, செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஆகியோர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலிலிருந்து இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இரண்டு கண்களை அறுவை சிகிச்சை மூலம் நேற்று இரவு அகற்றினர். பின்னர் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் E.அருண் ராஜ் நிலைய மருத்துவ அலுவலர் சித்ரா திருவள்ளுவன் ஆகியோரின் மேற்பார்வையில் கல்லீரல் உறுப்பு கோயம்புத்தூர் மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் திருநெல்வேலிக்கும் ஒரு சிறுநீரகம் மற்றும் இரு கண்கள் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் 7.7.2021 அன்று முதல் முறையாகவும் 7.4.2022 அன்று இரண்டாவது முறையாகவும் நேற்று மூன்றாவது முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் இன்று காலை 10.30 மணிக்கு கொடுக்கப்பட உள்ளது.மேலும் மூளைச்சாவு அடைந்தவரின் உடலிலிருந்து தானமாக பெறப்படும் உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். எனவே பொதுமக்கள் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பெற்று அதனை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு முன்வர வேண்டும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO