வீடு புகுந்து நகை பறிப்பு - முன்னாள் உதவி ஆணையர் மகனுக்கு 7 ஆண்டு சிறை
திருச்சி கே.கே நகரை அடுத்த சுந்தர் நகர் 7வது கிராசை சேர்ந்தவர் செண்பகவள்ளி (70). இவர், கடந்த (18.10.2022) அன்று வீட்டில் செண்பக வள்ளி தனியாக இருந்த போது அவர் வீட்டிற்கு வந்த நபர், வீடு வாடகைக்கு பார்க்க வந்துள்ளதாக பேச்சு கொடுத்து உள்ளே செண்பகவள்ளி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் அணிந்திருந்த 6 சவரன் தாலிச்சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் வளையல் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தான் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார்.
இதுகுறித்து செண்பகவள்ளி கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து கருமண்டபம் 5வது கிராசை சேர்ந்த முன்னாள் காவல் உதவி ஆணை வீராச்சாமியின் மகன் ரஞ்சித் (40) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் விவாதங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும், சமையலறையில் மடக்கி சிறை பிடித்து கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூபாய் 1000 அபராதமும், கத்தியை காட்டி மிரட்டி தாலிச்சங்கிலி மற்றும் வளையல்களை பறித்ததற்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் அபராதமும், மொத்தம் ரூபாய் 11 ஆயிரம் அபராதமும், இந்த அபராதங்களை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.
மேலும் இந்த தண்டணைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும். அதோடு பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி மீனா சந்திரா உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பு உதவி அரசு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜரானார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision