பரபரப்பான கள்ளிக்குடி மார்க்கெட் விவகாரம்! சாவியை ஒப்படைக்க அதிரடி உத்தரவு!!

பரபரப்பான கள்ளிக்குடி மார்க்கெட் விவகாரம்! சாவியை ஒப்படைக்க அதிரடி உத்தரவு!!

திருச்சி மணிகண்டம் அடுத்த கள்ளிக்குடி மார்க்கெட்டில் கடைகளில் பெற்று 2 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருந்ததால் வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்ட 288 கடைகளில் உரிமத்தை ரத்து செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை என சுமார் 3000 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மாநகரத்தில் மையப் பகுதி என்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டு வருகிறது. இதனை குறைப்பதற்காகவே அப்போதைய ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவாகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா 2014 ஆம் ஆண்டு மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் 77 கோடி ரூபாய் செலவில் காய்கறி பழங்கள் மற்றும் மத்திய வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.உற்பத்தியாளர்களுக்கு 207 கடைகளும் வியாபாரிகளுக்கு 623 கடைகளும் கட்டப்பட்டன.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதனுடைய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி இதனை திறந்து வைத்தார். ஆனால் இட வசதி உட்பட பல்வேறு காரணங்களை கூறி வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் கள்ளிக்குடி மார்க்கெட்டில் கூடுதல் வசதிகள் செய்து வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டன.

கள்ளிக்குடி மார்க்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் முதல் விற்பனை தொடங்கி வைத்தனர். ஆனால் 5 வியாபாரிகள் மட்டுமே அது கடை திறந்தனர். இதன் பிறகு அமைச்சர்கள் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் நிதர்சனம். இதனால் நஷ்டம் ஏற்பட்டு அங்கிருந்த 5 வியாபாரிகளும் கடையை மூடிவிட்டு மீண்டும் வந்து விட்டன.இதனால் 77 கோடி செலவில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது.

இதனை எப்படியாவது செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் தலைமையில் மட்டும் திருச்சி மாவட்ட மனிதவள சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடைகளில் பெற்றுக்கொண்டு 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாத நிலையில் இருப்பதால் அவற்றிற்கான உரிமத்தை ரத்து செய்து வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையினர் திருச்சி மாவட்ட விற்பனை குழு தற்போது உத்தரவிட்டுள்ளது.

வேளாண் துறையினர் சார்பில்…”இரண்டு ஆண்டுகளுக்குமேல் பயன்படுத்தாமல் இருப்பதும் வாடகை செலுத்தாமல் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் உள்ளதும், ஒப்பந்த ஆவணம் நிபந்தனைகளுக்கு எதிரானது எனவே கள்ளிகுடி வணிக வளாகத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட கடை ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது மற்றும் ஒப்படைக்கப்பட்ட தளவாடங்களை நல்ல முறையில் வணிக வளாக பொறுப்பாளரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட வேளாண் விற்பனை குழு வட்டாரத்தில் விசாரித்தபோது கள்ளிக்குடி மார்க்கெட்டில் தடைகளை பெற்றவர்கள் அவற்றை திறக்க வேண்டும் என இதற்கு முன் ஆட்சியராக இருந்த ராசாமணி தலைமையில் மூன்று முறையும் தற்போது உள்ள சிவராசு தலைமையில் இரண்டு முறையும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் தலைமையில் ஒரு முறையும் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அந்த வசதிகளும் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட கடைகள் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இதற்கு எதிரானது என்பதால் தற்போது 288 பேருக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்றம் முடிவு ஏற்ப விரைவில் மீண்டும் மறு ஒப்பந்தம் கோரப்பட்டு கடைகள் ஒப்படைக்கப்படும் என்றார்

கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் வாரத்தில் நடைபெற உள்ள நிலையில் வேளாண் விற்பனை குழு வின் இந்த அதிரடி முடிவு திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.