பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை வி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்

பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை  வி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்

திருப்புமுனை மனிதர்' என தொழில் துறையில் புகழ்பெற்ற வி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது 97வது வயதில் நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பெல், மாருதி உத்யோக் மற்றும் SAIL ஆகிய நிறுவனங்களின் முன்னாள் தலைவர் வி கிருஷ்ணமூர்த்தி அந்நிறுவனங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

97 வயதில் நேற்று காலமான வி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு இரண்டு மகன்கள், 5 பேரக்குழந்தைகள் மற்றும் 3 கொள்ளுப்பேர குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 'திருப்புமுனை மனிதர்' வி கிருஷ்ணமூர்த்தி இரண்டாம் உலகப்போரின் போது விமான நிலையங்களில் தொழில்நுட்ப வல்லுனராக தனது பணியை தொடங்கினார். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர் சென்னை மின்சார வாரியத்தின் முக்கிய பதவியில் இருந்தார் என்பதும் மின்சார வாரியம் மிகப்பெரிய அளவில் வளர்வதற்கு அவர் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1954 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவருடைய திறமையை மதித்து மின் திட்டங்களுக்கு பொறுப்பான திட்ட கமிஷனுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பெல் நிறுவனம் மிகப் பெரிய நஷ்டத்தில் இருந்த நிலையில் அந்த நிறுவனத்தை காப்பாற்ற முடியாது என பலர் முடிவு செய்த போது அந்த நிறுவனத்தை காப்பாற்ற தன்னுடைய முயற்சியை எடுத்து அதன்பின் அந்த நிறுவனத்தை லாபகரமாக மாற்றினார்

மாருதி நிறுவனத்தின் தலைவராக பதவியேற்ற வி கிருஷ்ணமூர்த்தி இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் நவீன சகாப்தத்தை அறிமுகப்படுத்தினார். மாருதி 800 மாடலை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தினார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு காலகட்டத்தில் தேசிய உற்பத்தித் திறன் கவுன்சிலின் தலைவராக பதவியேற்ற வி கிருஷ்ணமூர்த்தி, மேலும் தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராகவும், திட்டக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்

தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டெல்லியில் குடும்பத்துடன் கழித்த வி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது இறுதி ஆண்டுகளை சென்னையில் கழித்தார். தனது குடும்ப நிறுவனமான UCAL ஃப்யூயல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஆலோசகராகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிறப்பான சேவையை பாராட்டி கடந்த 1973ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1986 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2007ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜப்பானின் உயரிய சிவிலியன் விருதான தி கிராண்ட் கார்டன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சன் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

திருப்புமுனை மனிதர்' என்று அழைக்கப்படும் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மரியாதைக்குரிய ஒரு நபராகவும், உத்வேகமான வணிக தலைவராகவும் இருந்த நிலையில் அவரது மறைவிற்கு இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO