போலீசுக்கு பயந்து பாலத்தில் இருந்து குதித்த ரவுடிக்கு காலில் எலும்பு முறிவு

போலீசுக்கு பயந்து பாலத்தில் இருந்து குதித்த ரவுடிக்கு காலில் எலும்பு முறிவு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா மகாதானபுரம் கம்மநல்லூர் குடி தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்கிற வெட்டு சங்கர் (34). இவர் மீது கரூர் மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காடுவெட்டி பகுதியில் டீ கடையில் வேலை செய்து வரும் சுப்பிரமணியன் (54) என்பவர் மீன் வாங்குவதற்காக மாயனூருக்கு தனது மொபட்டில் சென்றுள்ளார்.

அப்போது காட்டுப்புத்தூர் - மாயனூர் செல்லும் சாலையில் சீலைபிள்ளையார் புத்தூர் வாழை தோப்பு அருகே இயற்கை உபாதைக்காக வண்டியை நிறுத்தி சென்றபோது, அங்கு ஸ்கூட்டரில் வந்த ரவுடி வெட்டு சங்கர் வண்டியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து சுப்பிரமணியன் கழுத்தில் வைத்து மிரட்டி என்னை கண்டால் போலீசாரே பயந்து விடுவார்கள் எனக்கூறி அவர் அணிந்திருந்த அரைபவுன் கைச்செயின், பணம் ரூ.1,300 ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த வழிப்பறி சம்பவம் குறித்து சுப்பிரமணியன் காட்டுப்புத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முசிறி டிஎஸ்பி யாஸ்மின் மேற்பார்வையில் தொட்டியம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சீலைப்பிள்ளையார்புத்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆணைக்கல் பட்டி உப்பாற்று பாலம் அருகில் போலீசார் நிற்பதை கண்டதும் ரவுடி சங்கர் என்கிற வெட்டு சங்கர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடி உள்ளார். இதனை அடுத்து போலீசார் துரத்தியதால் தப்பிப்பதற்காக உப்பாற்று பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் ரவுடி வெட்டுசங்கருக்கு வலது காலில் எலும்பு முறிவும், இடது கையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.

பின்னர் போலீசார் ரவுடி சங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் ரவுடி சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொட்டியம் அருகே பல்வேறு வழிபறி குற்றசம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி சங்கர் போலீசாரை கண்டதும் பாலத்தில் இருந்து குதித்ததில் பலத்த காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision