திருச்சி கோட்டை ரயில்வே மேம்பாலத்திற்கு விடிவுகாலம் - அதிகாரிகள் ஆய்வு - விரைவில் மேம்பால பணிகள்!

திருச்சி கோட்டை ரயில்வே மேம்பாலத்திற்கு விடிவுகாலம் - அதிகாரிகள் ஆய்வு - விரைவில் மேம்பால பணிகள்!

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் 1866 ஆம் ஆண்டு இந்தப் பாலமானது கட்டப்பட்டது. அதன் உறுதி தன்மை குறைந்து விட்டதாகக் கூறியுள்ள சேலம் கோட்ட ரயில்வே, இந்த தடம் தங்கள் கட்டுப்பாட்டில் வருவதால் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்றும், விரைவில் பணிகளைத் தொடங்க மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

Advertisement

திருச்சி மாவட்டத்தின் பழமை வாய்ந்த மற்றும் திருச்சி மலைக்கோட்டை சாலையுடன் இணைக்கக்கூடிய முக்கிய பாலமாக இருப்பதுதான் திருச்சி மாரிஸ் தியேட்டர் அருகில் உள்ள கோட்டை ரயில்வே மேம்பாலம்...திருச்சியின் முக்கிய பகுதியில் அமைந்து இருக்கக் கூடிய இந்தப் பாலம் இடிந்து சேதம் அடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

ரயில்வே மேம்பாலம் என்பதால் ரயில்கள் செல்லும் பொழுது ஏற்படும் அதிர்வுகலாளும் பாலம் தினம் தினம் பலம் இழந்து வருகிறது. மாட்டுவண்டி பயணிக்க ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் தற்போது கனரக வாகனங்கள் வரை பயணித்து வருவதால் மேலும் வலுவிழந்து வருகிறது. ஒருவேளை பாலம் இடிந்து விழுந்தால் இதில் பயணிக்கும் பயணிகள் பேராபத்தை சந்திக்கக் கூடிய சூழலும், பாலத்தின் கீழ் ரயில் செல்லும் பொழுது பாலம் இடிந்து விழுந்தால் எதிர்பாராத அளவிற்கு விபத்து ஏற்படும் சூழலும் உள்ள நிலையில் இன்னும் இந்தப் பாலம் மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்பது நமக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

Advertisement

இதற்கிடையில் தான் திருச்சியில் பெய்த மழையின் காரணமாக சாலை ரோட்டிலிருந்து மெயின் கார்ட் கேட் செல்லும் வழியில் உள்ள கோட்டை ரயில்வே மேம்பாலத்தின் ஓரத்தில் மண் சரிந்து அங்கு இருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அப்பகுதியில் செல்லாததால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. அன்றுமுதல் சரிந்த சாலையில் மணல் மூட்டைகளை அடிக்கி கனரக வாகனங்களுக்கு தடை விதித்து கம்பிகளை குறுக்கே வைத்தனர்.

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடிய இந்த கோட்டை மேம்பாலத்திற்கு இப்போதுதான் விடிவு காலம் பிறந்துள்ளது. கோட்டை ரயில்வே மேம்பாலத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் திருச்சி மாநகராட்சி முதன்மை பொறியாளர் அமுதவல்லி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்,நெடுஞ்சாலைலத்துறை,ரயில்வேத்துறை அதிகாரிகள், இன்று முதற்கட்ட ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

விரைவில் கோட்டை ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளனர். 25 மீட்டர் அகலம் உள்ள பாலம் கட்ட படுவதாலும் சாலையில் உள்ள முக்கிய கடைகள் அகற்றப்பட உள்ளதும், கோட்டை மேம்பாலத்திற்கு அருகில் உள்ள எல்.ஏ தியேட்டரில் கீழ்புறம் அணுகுசாலை வர இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சியின் முக்கிய சாலையாக இது இருப்பதால் மேம்பாலம் பணிகள் விரைவில் முடிந்தால் திருச்சியில் போக்குவரத்து நெரிசல்கள் குறைந்து பொதுமக்கள் நிம்மதி பெரும் மூச்சு விடுவார்கள்.