தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் சாப்பாடு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை (20.01.2024) திருச்சி வருகிறார். ஹெலிகாப்டரில் வரும் அவர் திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திகர் நவாஸ் எதிரே உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வந்து அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
இதற்காக ஸ்ரீரங்கத்தில் இரவு பகலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும், துப்புரவு தொழிலாளிகளுக்கு மாநகராட்சி மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு தூய்மை பணியாளருக்கு வழங்கப்படும்.
ஆனால் அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அம்மா உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாக்கடை மற்றும் குப்பைகளை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் மாநகராட்சி குப்பை வண்டியில் வைத்து எடுத்து செல்லப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. அந்த வாகனத்தின் உள்ளே குப்பைகள் இருந்த பொழுதும், அதில் உணவுகளை மூடாமல் பாத்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
மாநகர் தூய்மையாக இருக்க வேண்டுமென இரவு பகலாக உழைத்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு இது போன்ற ஒரு அவலமான செயலை மாநகராட்சி ஊழியர்கள் செய்துள்ளனர். தற்பொழுது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இது போன்ற முறையில் உணவுகளை கொண்டு செல்வதை அதிகாரிகள் கவனித்தார்களா அவர்களுக்கு இது தெரியவில்லையா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தூய்மை இந்தியா பட்டியலில் திருச்சி மாநகராட்சி முதல் இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு இது போன்ற கேவலமான முறையை மாநகராட்சி ஊழியர்கள் கையாண்டது பலரது கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision