குறைந்த விலையில் தங்கம் - கொள்ளை - 4 பேர் கைது - திருச்சி எஸ்.பி பேட்டி

குறைந்த விலையில் தங்கம் -  கொள்ளை - 4 பேர் கைது - திருச்சி எஸ்.பி பேட்டி

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்த அன்வர் பாஷா என்பவர் தன்னிடம் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு தங்கம் இருப்பதாகவும், அதை குறைந்து விலைக்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன் நண்பர் கார்த்திக் என்பவருடன் கடந்த 18ம் தேதி, 14.50 லட்சம் பணத்துடன், காரில் துவரங்குறிச்சி வந்துள்ளார்.

துவரங்குறிச்சி வந்த ஜியாவுதீன் வெளிநாட்டு தங்கம் வாங்க பணத்துடன் வந்திருப்பதாக அன்வர் பாஷாவுக்கு போன் செய்தார். சிறிது நேரத்தில் காக்கி உடையில், வேறொரு காரில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், தஞ்சாவூரில் இருந்து வந்த ஜியாவுதீன் மற்றும் கார்த்திக் ஆகியோர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர்கள் வைத்திருந்த பணத்தைப் பறித்து சென்றனர். சம்பவம் குறித்த புகார் படி துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவுபடி அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக கூறி பணம் பறித்த மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை வளநாடு அருகே டி.பொருவாய் பகுதியில் சந்தேகப்படும்படி, காரில் நின்று கொண்டிருந்த அனிஷ் ஜேம்ஸ், பெருமாள், சக்திவேல், சரவணன் ஆகிய நான்கு பேரை, தனிப்படை போலீசார் பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை, மணப்பாறை பகுதிக்கு வரவழைத்து 10.50 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ஒரு கார், 100 கிராம் தங்க கட்டி, 10 போலி தங்கக் கட்டிகள், 21 மொபைல் போன்கள், 12 சிம் கார்டுகள், 2 போலி பதிவு எண் பலகைகள், அரசு முத்திரையுடன் கூடிய சிவில் ஜட்ஜ் என்ற லோகோ மற்றும் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision