திருச்சி பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்ட பணிகளுக்கான அரசாணை

திருச்சி பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்ட பணிகளுக்கான அரசாணை

திருச்சி பஞ்சப்பூரில் 110 ஏக்கரில் ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையவிருக்கிறது. இதன் முதற்கட்டப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.349.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது.திருச்சி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பஞ்சப்பூரில் ரூ. 850 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய பஸ்நிலையம் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வருடம் 30.12.2021  அடிக்கல் நாட்டினார்.

இந்த பஸ்நிலையத்தில் ஒரே நேரத்தில் 350 பஸ்கள் நிற்கும் வசதி, மொத்த மற்றும் சில்லறை காய்கறி விற்பனை மையம், வணிக வளாகம், லாரி நிறுத்துமிடம் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளன. 

இந்த பஸ்நிலைய பணிகள் 2 கட்டமாக மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிக்கு ரூ. 349 கோடியே 98 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இதில் பஸ்நிலையம், லாரி செட், காய்கறி மார்கெட் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பஸ்நிலையப்பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி பெங்களூர் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அவர்கள் மண்பரிசோதனை உள்ளிட்ட முதற்கட்ட ஆய்வறிக்கையை கடந்த ஜனவரியில் வழங்கினர். 

மாநகர்-புறநகர் பேருந்துகள் இயக்கம், பயணிகள் வரத்து, பஸ்நிலையத்துடன் இணையும் நெடுஞ்சாலைகள், அமைவிடம், பயணிகளுக்கான குடிநீர் வசதி, கட்டுப்பாட்டு அறை, ஆஸ்பத்திரி, போலீஸ் சோதனை சாவடி, தீயணைப்பு மீட்பு சேவை, வணிக வளாகம் போன்ற பல்வேறு வசதிகளை விரிவான திட்ட அறிக்கையில் இடம்பெறச் செய்தனர். 

அதன்பின்னர் பல கட்ட நேரடி ஆய்வுக்கு பின் கடந்த மார்ச் 30-ந்தேதி விரிவான திட்ட அறிக்கையினை அமைச்சர் கே.என். நேரு மூலமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் முதன்மை செயலாளரிடம் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் விரிவான திட்ட அறிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை கடந்த ஏப்ரல் 4-ந்தேதி ஒப்படைக்கப்பட்டது.

இதுபற்றி மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, தற்போது விரிவான திட்ட அறிக்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் பரிசீலனைக்குப் பின் விரிவான திட்ட அறிக்கையுடன் முன்மொழிவு சமர்ப்பித்துள்ளனர். முன்மொழிவு தொழில்நுட்ப அனுதிக்காக அனுப்பி வைக்கப்படும். தொழில் நுட்ப அனுமதியை தொடர்ந்து உடனே நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு டெண்டர் விடப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடங்கும். பணிகள் தொடங்கினால் ஓரு வருடத்தில் பஸ்நிலையம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

இன்று ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையும் பஞ்சப்பூர் இடத்தில் நவீன கருவிகளை கொண்டு சாட்டிலைட் மூலம் சர்வே செய்யும் பணியினை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO