துறையூரில் அரசு பள்ளி மாணவிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்.

துறையூரில் அரசு பள்ளி மாணவிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்.

முதுகலை கணித ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூரில் அரசு பள்ளி மாணவிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்.

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் சண்முகம். மாற்றுத்திறனாளியான இவர் முருங்கப்பட்டியில் அரசு பள்ளியில் முதுகலை கணித ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2019 ஆண்டு துறையூர் பெருமாள் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளிடமும் 1200 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், இதற்கு ரசீதும் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 6ம் தேதி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் கூட்டத்தில், மாணாக்கர்களிடம் பணம் வசூலிப்பது குறித்து கேள்வி எழுப்பிய முதுகலை கணித ஆசிரியர் சண்முகத்தை சக ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சண்முகம் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதனையடுத்து துறையூர் பெருமாள் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் சண்முகம் துவரங்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை அறிந்த அசிரியர் சண்முகத்தின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருமாள் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவிகள் இன்று அரசு பேருந்து சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். மேலும், கணித ஆசிரியரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH