பல கோடி ரூபாய் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர்கள் - நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு!
பல கோடி பண மோசடி செய்த அரசுப்பள்ளி ஆசிரியர் உள்ளிடவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் யுனிவர்சல் டிரேடிங்க் சொலியூசன் என்கிற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு பணம் இரட்டிப்பாக தரப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டு அதன்படி செயல்பட்டு வந்துள்ளது.
இந்ந நிறுவனத்தில் பலர் ஒரு லட்சம் ரூபாய் முதல் முதலீடு செய்துள்ளனர்.கடந்த 2019 மார்ச் மாதம் வரை மாதந்தோறும் சரியாக பணத்தை திருப்பி தந்த அந்த நிறுவனம் நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி தேர்தல் முடியும் வரை பணம் தர முடியாது தேர்தல் முடிந்த பின்பு பணம் தருகிறோம் என கூறியுள்ளனர்.ஆனால் ஓர் ஆண்டாகியும் பணம் தரப்படவில்லை என கூறப்படுகிறது.
அது குறித்து கேட்டால் யாரும் சரியாக பதிலளிக்கவில்லை என கூறி தங்களை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்த அரசு பள்ளி ஆசிரியர்களான ஜஸ்டின் பிரபாகரன்,பரிமணம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மனு அளித்தனர்.