குணசீலம் திருத்தேர் உற்சவம் பிரம்மோற்சவ விழா

குணசீலம் திருத்தேர் உற்சவம் பிரம்மோற்சவ விழா

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின் பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி நூதன வழிபாடு செய்தனர்.

தென்திருப்பதி என்றழைக்கப்படுவதும், குணசீலம் மஹரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்னவேங்கடேசனாக காட்சியளித்த ஸ்தலமான திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த குணசீலம் பிரஸன்ன வேங்கடாசலபதிபெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தகோயிலில் மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்கி 48 நாட்கள் விரத முறைப்படி வணங்கினால் குணமாகும் என்பது ஐதீகம்.

திருப்பதி செல்ல இயலாதவர்கள் தங்கள் நேர்த்திக்கடனை குணசீலம் திருத்தலத்தில் செலுத்தலாம் என்பதும் ஐதீகம். மஹரிசிக்கு காட்சியளித்த தினமான புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை கொண்டு இத்திருக்கோவிலில் பிரம்மோற்சவம் 11- தினங்கள் கொண்டாடப்படும். அதன்படி 4-ம்தேதி பிரம்மோற்சவமானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனுமந்தவாகனம், சேஷவாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்கருட வாகனத்தில் உபயநாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி கோயில் பிரகார உலாவந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஸ்ரீனிவாசபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்திகோஷமிட்டவாறு மழையில் நனைந்தவாறு தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

வேறு எந்தக்கோவிலிலும் இல்லாதவாறு திருத்தேரின் பின்புறமாக பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், கைகளில் தேங்காயினை வைத்துக்கொண்டு அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இவ்வாறு செய்வதால் பெருமாள் அருளை பெற்று பிறவிப்பலன் பெறுவர் என்பது ஐதீகம். திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision