திருச்சியில் வீரச் சின்னங்கள் - சுற்றுலா சுற்றலாம்

திருச்சியில் வீரச் சின்னங்கள் - சுற்றுலா சுற்றலாம்

வரலாறு என்றுமே வீரர்களுக்கு மதிப்பளித்திருக்கிறது. மனிதனின் ஆதிக்காலத்தில் வேட்டையாடுவது வீரமாக இருந்தது. பின்னர் விவசாயம் காக்க விலங்குகளை விரட்டுவது வீரமாக இருந்தது. போர்களில் மன்னர்கள் மட்டுமல்லாமல் படை வீரர்களும் தங்கள் வீரத்தை எப்பொழுதும் நிலைநாட்டி வந்துள்ளனர். பின்னர் நாடுகளின் எல்லைகள் வரையறுக்கும்பொழுது, ராணுவச் சண்டைகள் நடந்திருந்துள்ளது. 

பல வீரச் செயல்களை இந்த உலகம் கண்டிருக்கிறது. வீரர்களின் நினைவாக மக்கள் சின்னம் வைப்பது பழக்கத்தில் பலகாலமாக உள்ளது. வரலாற்றுக் காலங்களில் நடுகற்கள் (ஆங்கிலத்தில் Hero Stone) வைக்கப்பட்டு வீரர்களைப் போற்றியிருக்கிறோம். உலகமே போரில் சூழ்ந்த காலத்தையும் வரலாறு பார்த்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரினால் கடும் விளைவைச் சந்திதிருக்கிறோம்.

உலகப்போரின்போது அனைத்து நாடுகளும் போரில் ஈடுபட்டன, நம் நாடு இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்ட காலமானதால், நம் மக்கள் British Indian Army சார்பாக உலகப் போரில் வீரர்களாகப் போரிட்டனர். குறிப்பாக முதல் உலகப் போரில் British Indian Armyக்கு வெற்றி தேடித் தந்ததில் திருச்சியில் இருந்து பங்கேற்ற வீரர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது.

திருச்சி வீரகள் சிறப்பாக போர்புரிந்து உயிர்த்தியாகமும் செய்துள்ளனர். இதனை நினைவுகூறும் வகையில் லால்குடி ரோட்டில் வாளாடிக்கு அடுத்து ஒரு நினைவு வளைவு 1922-ல் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பச்சாம்பேட்டை வளைவு என அழைக்கப்பட்டு நகரப்பேருந்துகள் நிறுத்தமாக இருக்கும் அந்த வளைவைப் பற்றி எனக்கு பச்சாம்பேட்டையில் வசித்த காலங்களில் தெரியாமல் போய்விட்டது.

2022-ல் தொல்லியல் துறை இவ்வளைவை புதுப்பித்து, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி.சிவா மீண்டும் திறந்து வைத்தார். அதேபோல் காந்தி மார்க்கெட் எதிரில் உள்ள மணிக்கூண்டுக் கோபுரமும் ஆங்கிலேயர் காலத்தில் முதல் உலகப்போரில் பங்கேற்ற திருச்சி வீரர்கள் நினைவாக கட்டப்பட்டதாகும். மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் இவ்விடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.

மேலும் நம் காலத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் அவர்களுக்கு இறுதி ஊர்வலம் சென்ற பொழுது திருச்சியே மரியாதை செய்து வழியனுப்பியது. மாரிஸ் பாலத்தை மேஜர் சரவணன் வீர உடல் கடக்கும்போது வீரவணக்க்கம் செலுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை நினைக்கும்போது இன்றும் உணர்ச்சி வசப்படுகிறேன்.

மேஜர் சரவணன் வட்டம் வெஸ்ட்ரி பள்ளிக்கு முன்பாக நன்முறையில் பராமரிக்கப்படுகிறது. இவ்விடங்களில் முழு வரலாற்றை இன்னும் பெரிதாக பலகைகள் அல்லது கல்வெட்டுகளாக வைத்து, பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் காட்ட வேண்டும். ஓர் சுற்றுலாத் தலமாக இவ்விடங்களை மேம்படுத்த வேண்டும். திருச்சியைச் சுற்றி உள்ள நம் வரலாறும் வீரமும் நம் பிள்ளைகள் அறியச் செய்வோம்.

தொடந்து சுற்றலாம் தொகுப்பாளர் - தமிழூர். கபிலன்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision