வரலாறு நிறைந்த பண்பாட்டு புதையலே திருச்சியின் தனித்துவம் - உலக சுற்றுலா தின சிறப்பு தொகுப்பு

வரலாறு நிறைந்த பண்பாட்டு புதையலே திருச்சியின் தனித்துவம் - உலக சுற்றுலா தின சிறப்பு தொகுப்பு

உலக சுற்றுலா அமைப்பின் ஒரு பணி உலக மக்களின் பொருளாதார, சமூக வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவது. குறிப்பாக வளரும் நாடுகளின் வசிப்பவர்களுக்கு சுற்றுலா என்பது ஒரு மூன்றாம் பொருளாதார செயல்பாடு மற்றும் சேவைத் துறையின் ஒரு பகுதியாகும். சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட தொழில்துறை உலகின் வேலைகளில் கிட்டத்தட்ட 6% ஆகும். இந்த வேலைகள் உலகளாவிய வறுமையை ஒழிப்பதோடு, குறிப்பாக பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா மூலம் பெறப்பட்ட வருவாய் அரசாங்கம் கடனைக் குறைக்க மற்றும் சமூக சேவைகளில் முதலீடு செய்ய உதவுகிறது. அன்னிய செலாவணி வருவாயில் சுற்றுலாத் துறை முக்கியத்துவம் பங்கு வகிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் 'சுற்றுலா, எல்லாவற்றையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கானதாகும்.' சுற்றுலாப் பொருளாதாரம் மற்றும் வருவாயைப் புதுப்பிக்க, பல பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.  
உலக சுற்றுலா தினம் சுற்றுலாத் துறையின் தனித்துவமான திறனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுலா தினத்தில் திருச்சி நகரின் சிறப்பம்சம் குறித்து காண்போம். திருச்சிராப்பள்ளி தமிழ் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. திருச்சி சோழர்கள் ஆண்ட பகுதியில் முக்கியமான ஒன்றாகும். முற்காலத்தில் சோழர்களின் தலைநகரமாக உறையூர் இருந்தது. இதனை கோழியூர் என்றும் அழைப்பர். திருச்சி ஒரு கோயில் நகரம் ஆகும். இங்கு அதிக அளவில் கோவில்கள் உள்ளன. இங்குள்ள பல கோவில்கள் மிகவும் பழமையானதாகும், வரலாற்று சிறப்புமிக்கவையாக உள்ளன.

திருச்சிராப்பள்ளி தமிழ் நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் நான்காவது பெரிய மாநகராட்சியாகவும், நகர்புற குழுமமாகவும் இருக்கிறது. 16 ஆம் நூற்றாண்டில் கிடைத்த ஒரு பாறையில் உள்ள கல்வெட்டில் திருச்சிராப்பள்ளியை ‘திரு-சிள்ள-பள்ளி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ‘புனித-மலை-நகரம்’ என்று பொருள். சில அறிஞர்கள் இந்நகரத்தின் பெயரானது சிறிய புனித நகரம் என்று பொருள்படும் ‘திரு-சின்ன-பள்ளி’ என்ற பெயரில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்புகின்றனர். திருச்சி (Trichy) நகரம் தமிழ்நாட்டின் பழமையான வசிப்பிடங்களில் ஒன்றாகும். இது ஒரு வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது மற்றும் பல பேரரசுகளின் உயர்வு மற்றும் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. வளமான கலாச்சாரம் பண்பாடு மற்றும் பாரம்பரியம் திருச்சியை மிகவும் உன்னதமான வரலாற்று, சமய இடங்கள் நிறைந்ததாகவும் மலை கோட்டை நகரமாகவும் உருவாக்கியுள்ளது. 

வயலூர் முருகன் கோயில், மலைகோட்டை கோயில், ஶ்ரீரங்கம், நாதர்சுவாமி கோயில், ஜம்புகேஸ்வரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், எறும்பீஸ்வரர் கோயில், வயலூர் முருகன் கோயில், வெக்காளியம்மன் கோயில், குணசீலம் விஷ்ணு கோயில், நாதிர் ஷா மசூதி, புனித யோவான் தேவாலம் மற்றும் புனித ஜோசப் தேவாலயம் முதலானவை இந்த வளமான வரலாற்றின் படைப்புகள் ஆகும். அத்துடன் நவாப் அரண்மனை மற்றும் கல்லணை அணக்கட்டு மற்றும் முக்கொம்பு அணை முதலியன திருச்சியின் முக்கியவத்தும் நிறைந்த பழமையான கட்டமைப்புகள் ஆகும். 

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க  திருச்சி மாநகரின் முக்கிய சுற்றுலா  நகரமாக மாற்றுவது குறித்து, கபிலன் பயிற்சி நிறுவனம் மூலம் பல நிறுவனங்களுக்கு விருந்தோம்பல் & வாடிக்கையாளர் சேவை குறித்து பயிற்சிகள் நடத்தும் கபிலன் அவர்கள் கூறுகையில்... தமிழ்நாடு பாரம்பரிய புதையல்  என்றே கூறலாம் நம் மாநிலம் பாரம்பரியங்கள் கொண்ட மற்றும் வரலாற்றின் சிறந்த மாநிலம். சுற்றுலாத் துறையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகித்தாலும்  சர்வதேச  அளவில் இன்னும் மேம்பட வேண்டிய சூழல் உள்ளது. அதற்கு நம் பகுதியில் உள்ள மக்களுக்கு  நம்முடைய வரலாற்றை அறியச்செய்வது  மிகவும் அவசியமானது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தாலுக்காவிலும் நகரம் குறித்த தகவல் மையங்கள் அமைத்தல் வேண்டும். திருச்சி தொல்லியல் நகரங்களில் ஒன்று என்று கூறலாம்.

தொல்லியல் ஆராய்ச்சிகள் திருச்சியை சுற்றி நடைப்பெற்றால் பல வரலாற்று தகவல் கிடைக்கும். திருச்சி தமிழகத்தின் மையப் பகுதியாக இருப்பதும் மிக சிறப்பு. போக்குவரத்து வசதி பொருத்தமட்டில்   ரயில் வழி போக்குவரத்து, சாலை வழி போக்குவரத்து, விமான போக்குவரத்து என்று சர்வதேச அளவில் திருச்சி மாநகர போக்குவரத்து வசதி நிறைந்த மாநகரமாக திகழ்கிறது. திருச்சியில் இன்னும் பல கிராமங்களில் கூட குறிப்பாக செங்களுர் போன்ற கிராமங்களில் முதுமக்கள் தாழிகள் கிடைக்கப்பெறுகின்றன. எனவே தொல்லியல் துறையினரும் திருச்சியில் பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். திருச்சி தொல்லியல் வட்டம் தன் ஆய்வுகளை மக்களுக்கு கொண்டு செல்ல பல விழிப்புணர்வு கண்காட்சிகள் நடத்தினால் நன்றாக இருக்கும். அது மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  வாரத்தில் ஒரு நாளை "நமது ஊர்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நம் நகரத்தை குறித்த தெளிவான வரலாற்றை தெரியப்படுத்துதல் அவசியம்.

நம் நகரத்தைச் சுற்றியுள்ள வரலாற்று சுற்றுலாத்தலங்களின் சிறப்பம்சங்களை காணொளியாய் உருவாக்கி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சுற்றுலாத் துறையையோடு குறிப்பாக உணவு மிக முக்கியமானது விருந்தோம்பல் என்பது தமிழர்களின் அடையாளம். பாரம்பரியமான உணவு வகைகள் திருச்சி சுற்றி என்ன உள்ளது என்பதை ஆராய்வது மிக முக்கியமானவை. இயற்கை அழகுடன், பாரம்பரியம் நிறைந்ததாகவும்  வரலாற்று அடையாளங்களோடு திகழும் திருச்சி மாநகர் சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமான நகரமாக மாற்றி அமைக்க பல்வேறு மேலே குறிப்பிட்ட  திட்டங்களை செயல்படுத்தினாலே சிறப்பானதாய் மாற்றிடலாம். சுற்றுலாத்துறை மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநகரமாக மாறிடவும் அதிக வாய்ப்புள்ளது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn