சில்வர் கேரியரில் சுடச்சுட சாப்பாடு- திருச்சியை அசத்தும் கூட்டுக் குடும்ப கிச்சன்!

சில்வர் கேரியரில் சுடச்சுட சாப்பாடு-  திருச்சியை அசத்தும்  கூட்டுக் குடும்ப கிச்சன்!

சமைத்த உணவு வீட்டுக்கு மூன்று வேளையும் மாதம் முழுவதும் முதியோர்களுக்கும் ,அலுவலகம் செல்லும் கணவன் மனைவிக்கும் ஒரு வரப்பிரசாதம் அப்படி ஒரு சேவையை செய்கிறது திருச்சியை சேர்ந்த கூட்டுக்குடும்ப கிச்சன்!

உணவு என்று வந்துவிட்டால் அதற்கு எப்பொழுதுமே மக்களிடையே வரவேற்பு இருக்கும்.அதிலும் ஆரோக்கியமான வீட்டுமுறை உணவென்றவுடன் மக்கள் அளித்த ஆதரவு அளவற்றது என்கிறார் திருச்சியை சேர்ந்த உமா மகேஸ்வரி. இவர் கடந்த ஒரு வருடமாக கே.கே.கிச்சன் என்ற பெயரில் மூன்று வேளையும் வீட்டிற்கே உணவுகளை வழங்கி வருகிறார்.

‘‘எங்களுடைய குடும்பம் ஹோட்டல் குடும்பம் எனலாம்.. என் தாத்தா காலத்தில் இருந்தே நாங்கள் ஓட்டல் துறையில் ஈடுபட்டு வருகிறோம். தாத்தாவிற்கு பிறகு என் அப்பா பார்த்துக் கொண்டார். இப்போது என் அண்ணன் பார்த்துக் கொள்கிறார். மேலும் என் அம்மா வீட்டில் இருந்தபடியே வரலட்சுமி பூஜை போன்ற சின்னச் சின்ன விழாக்களுக்கு உணவு தயாரித்து தருவார். அதைப்பார்த்து தான் நான் வளர்ந்தேன். அதனால் எனக்கும் ஓட்டல் துறை மேல் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு.

கரூர் பைபாஸ் சாலையில் ராஜகணபதி பெருகமணி ஐயர் என்ற பெயரில் ஒரு ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறோம். அது தவிர விராலி மலையில் ஐ.டி.சி மற்றும் எல்.எஸ்.ஜி நிறுவனங்களுக்கு கேட்டரிங்கும் செய்து வருகிறோம். இந்த துறை எனக்கு மட்டுமில்லை என் கணவருக்கும் பிடித்தமானது. 

குளிர்பானம் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறோம்.உடன் குல்ஃபியும் தயாரித்து வருகிறோம். மட்கா குல்ஃபின்னு சொல்வாங்க. சின்ன மண் பானையில் வரும். குச்சியிலும் தருகிறோம். மேலும் ரெடிமேட் சப்பாத்தி, பருப்பு பொடி போன்ற பொடி வகைகளும் தனியாக செய்து வருகிறோம்’’ என்றவர் கே.கே.கிச்சன் பற்றி கூறத்தொடங்கினார்.

‘‘நாங்க ஓட்டல் துறையில் இருப்பதால், இங்குள்ளவர்களுக்கு எங்களைப் பற்றி நன்றாக தெரியும். இந்த கிச்சன் நாங்களா ஆரம்பிக்கல. வேறு ஒருவர் ஆரம்பித்து பத்து நாட்கள் தான் நடத்தினாங்க. அதன் பிறகு அவர்களால் தொடர்ந்து செய்ய முடியல. அதனால், ‘உங்களால் எடுத்து நடத்த முடியுமா’ன்னு கேட்டாங்க. சரி செய்து பார்ப்போம்னு தான் நடத்த ஆரம்பிச்சோம். ஆனால் இதை நான் நடைமுறைக்கு கொண்டு வரவே கிட்டத்தட்ட ஒரு மாசமாச்சு.

 ஆரம்பத்தில் நான்கு பேர் தான் வாடிக்கையாளர் இருந்தாங்க. நான் விளம்பரம், பேம்ப்லெட் எல்லாம் கொடுத்தேன். அதைப் பார்த்து ஆட்கள் சேர்ந்தாங்க. இப்ப 100 பேருக்கு தினமும் மூன்று வேளையும் உணவு கொடுக்கிறோம்.

காலை மற்றும் இரவு வேளை உணவில் இட்லி கண்டிப்பா இருக்கும். அதனோடு சப்பாத்தி, ஆப்பம், பிடிக்கொழுக்கட்டை, இடியாப்பம்னு இன்னொரு டிபன் வெரைட்டி இருக்கும். மதியம் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், அப்பளம்ன்னு கொடுக்கிறோம். சாம்பார் வாரத்தில் இரண்டு நாட்கள் இருக்கும். ஒரு நாள் புளிக்குழம்பு, மோர்குழம்பு. ஒரு நாள் பிரிஞ்சி, தேங்காய் சாதம், புளிசாதம்ன்னு கலவை சாதம் ஒரு பொரியல், அப்பளம் தருகிறோம்.

சிலர் ராகி அடை கேட்பாங்க. அந்த சமயம் இட்லியோட சேர்த்து தருவோம். சிலர் காலையில் டிபனுடன் சாப்பிட காபி மற்றும் இரவு பால், பழங்கள் கேட்பாங்க. சிலர் சாதம் இல்லாமல் குழம்பு, கூட்டு, பொரியல் மட்டும் விரும்புவாங்க. ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப செய்து தருகிறோம்’’ என்றவர் ஒவ்வொருவருக்கும் தனியாக ஹாட்பேக்கில் தான் உணவுகளை பரிமாறி வருகிறார்.

‘‘ஒவ்வொருவருக்கும் இரண்டு ஹாட்பேக்ன்னு வச்சிருக்கோம். அதில் ஒரு சிலர் அவங்களே வாங்கி கொடுப்பாங்க. அவங்களுக்கு மட்டும் அதில் பேக் செய்து தருவோம். சாப்பாடு என்பதால் கொஞ்சம் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதில் மிகவும் கவனமாக இருப்போம். 

காலை டிபன் 9 மணிக்கும், மதிய உணவு ஒரு மணிக்கும். இரவு உணவு எட்டு மணிக்கெல்லாம் கொடுத்திடுவோம். மழைக்காலத்தில் உணவினை வாட்டர்ப்ரூப் பேக்கில் வைத்து கொடுப்பதால் அதன் தன்மை மாறாமல் அதே சுவையோடு இருக்கும்.

டெலிவரி பொறுத்தவரை காலை மற்றும் மாலை நேரத்திற்கு மட்டும் கல்லூரி பசங்க பகுதி நேர வேலையா செய்றாங்க. மதியம் எங்களுடைய ஆட்கள் கொடுத்திடுவாங்க. எங்க கிச்சன் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் கொடுக்கிறோம். வேலைக்கு செல்பவர்கள், முதியவர்களை விடுதி மாணவர்கள் மட்டுமின்றி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கி வருகிறோம் .

எங்களின் இலக்கு 150 பேருக்காவது உணவு கொடுக்கணும். இதை சேவையாகத்தான்  செய்றோம். எங்களின் முழு நோக்கமே ஆரோக்கியமான மற்றும் சுவையான சைவ உணவு கொடுக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார் உமா மகேஸ்வரி.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO